Archive for May, 2011

விநாயகர் வணக்கம்

05/22/2011

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

Advertisements

முதல் தந்திரம் – 4. உபதேசம்

05/15/2011

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே. 

சிவத்தைக் கண்டு அசைவற நின்று அப்பரிசாக அமர்ந்துநின்ற சிவசித்தர்கள் தம்மை அணுவாகச் செய்த மலம் நீங்கப் பெற்றமையால், அங்கு இங்கு என்னாது எங்குமாய், இறைநிறைவில் அழுந்தி நிற்பர். அந்நிலையில் அச்சிவன் உயிர்கள் பொருட்டுச் செய்கின்ற செயல்களையும், அச் செயல்கட்கு வாயிலாக அவன் தோற்றுவித்து நிறுத்தியுள்ள காலத்தின் தொழிற்பாட்டினையும் அறியும் ஆற்றலுடையவராய்த் தம்மை இழந்து நிற்றல் வந்தமையால் விளைந்த செயலறுதியிலே இருப்பர்.

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே

மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!


முதல் தந்திரம் – உபதேசம்

05/14/2011

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச் சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.

முதல் தந்திரம் – உபதேசம்

05/14/2011

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவ லோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற் றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கின வர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத் தாறினின்றுமாம்.

முதல் தந்திரம் ஆகமச் சிறப்பு

05/11/2011

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

திருமூலர் சந்நிதி

05/10/2011

திருமூலர் கோயில்

திருமூலர் வரலாறு குறித்தும் பாயிரப் பகுதியில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருமூலர் பெரியபுராண நாயன்மார் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். இவர் வரலாற்றைப் பெரியபுராணமும் எடுத்துரைக்கிறது.  வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த முனிவர் ஒருவர் மாடு மேய்க்கும் ஓர் இளைஞன் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மூலன் எனப் பெயர் பெற்றார். திருவாவடுதுறையில் யோகத்தில் பலகாலம் இருந்து இத்திருமந்திரமாலையை  உலகுக்கு வழங்கினார். 

காலங்கி சித்தர்

05/10/2011

காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர். காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.

“”ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,” என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.

காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

“”அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?” என்றார்.

இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.

“”குருவே! நான் தான் காலாங்கி,” என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, “”அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,” என்றார்.

காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.

இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே “இளம் பிள்ளை’. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை “காலாங்கி சித்தர்’ என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து “சித்தேஸ்வரர்” என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

திருவிழா : அமாவாசை, பவுர்ணமி
சிறப்பு : சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது. இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.

மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. “ஞானசற்குரு பால முருகன்’ என இவரை அழைக்கின்றனர். நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.

திருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல்

05/10/2011

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் –

 • “கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
  • கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
 • காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
  • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
 • கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
  • 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
 • ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
  • ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா” (1)
 • “செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
  • 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
 • நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
  • நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
 • பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
  • பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
 • 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
  • மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே” (2)
 • “மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
  • 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
 • கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
  • 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
 • கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
  • கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
 • படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
  • 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே” (3)
 • “தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
  • தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
 • 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
  • ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
 • பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
  • பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
 • துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
  • சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே.” (4)
 • “சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
  • சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
 • மத்தான மன்மதன்போல் தேகமாகும்
  • மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
 • எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
  • ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
 • அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
  • அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே.” (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது மலைகளில்  எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது. விண்வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.

சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறிய பசுக்கள்

05/09/2011

இடையன் மரணமுற்றபோது அவன் மேய்த்தபசுக்கள் சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறியபோது, அவற்றின் துன்பம் தீர்பதற்காக ஆகாய வீதியில் போய்க்கொண்டு இருந்த சித்தர் பெருமான் அந்த இடையனின் உடலுக்குள் புகுந்த, திருமூலர்

அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர்

05/09/2011

அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.

1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2. திருமூலர் சிற்ப நூல் – 1000
3. திருமூலர் சோதிடம் – 300
4. திருமூலர் மாந்திரிகம் – 600
5. திருமூலர் சல்லியம் – 1000
6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
10. திருமூலர் பெருங்காவியம் – 1500
11. திருமூலர் தீட்சை விதி – 100
12. திருமூலர் கோர்வை விதி – 16
13. திருமூலர் தீட்சை விதி – 8
14. திருமூலர் தீட்சை விதி – 18
15. திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
17. திருமூலர் ஆறாதாரம் – 64
18. திருமூலர் பச்சை நூல் – 24
19. திருமூலர் பெருநூல் – 3000

போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


%d bloggers like this: