Archive for June, 2011

திருமூல நாயனார் ஞானம்

06/15/2011

திருமூல நாயனார் ஞானம்

அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி
அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்
படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1

அதுவாகி அவனளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாரும் அகாரமதே மூலமாகி
அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம்மூலமே. 2

மூலமெனு மாதார வட்டந் தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
திருவடியுந் திருமேனி நடமுமாகும்
கோலமுடன் அன்ட மெல்லாந் தாங்கிக்கொண்டு
கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே. 3

அரிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. 4

நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. 5

ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
நிலையான ஓங்கார பூட மாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. 6

எய்தரியா பரசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
இருநேர மர்றிடத்தே யிறைஞ்சிக் காணே. 7

காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே. 8

தெளிவரிய பாதமது கார மாகிச்
சிற்பரமுந் தற்பரமுந் தானேயாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூலமாகி
முச்சுடர்ந் தானாகி முடிந்த் சோதி
சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர்

Advertisements

திருமந்திரச் சிந்தனைகள்

06/15/2011

திருமந்திரம் உலகுக்கு வழங்கும் உயர்ந்த கருத்துகள் மிகப்பல. சான்றுக்குச் சில மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

  • அன்பும் சிவமும் ஒன்றே

அன்பு வேறு சிவன் வேறு என்பார் அறிவில்லாதவர் என்றும்,அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மையென்றும், இதனை உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் என்றும் கூறுகின்றார் திருமூலர்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.

  • இரு கோயில்கள்

உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில். நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு
பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

  • உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

சிவஞானம் பெற்றுப் பிறவியை நீக்குவதற்கு உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார் திருமூலர்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பு என்பது இழிவானதன்று. அது இறைவனுக்கு உரிய திருக்கோயில் என்பார் அவர்.

  • ஆசை அறுமின்

ஆசையே துன்பத்திற்கு அடிப்படை யென்பர். ஆசை அற்றால் அனைத்துத் துன்பங்களும் அழிந்துபோகும். எஞ்சி நிற்பது பேரானந்தமே.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!

  • ஒன்றே குலம் ஒருவனே கடவுள்

தமிழர் என்றும் எண்ணிப் பெருமைப்படத்தக்க பொதுமைத்தத்துவத்தை வழங்கியவர் திருமூலர். சாதி, மதம், நாடு, மொழி என்று பல தடைச் சுவர்களால் சிதறிக்கிடக்கும் மனித குலத்தைநோக்கி,

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை

என முழங்கினார்.

என்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் பின்பற்றத்தக்க உயர்ந்த நெறிகள் பலவற்றை உள்ளடக்கியது திருமந்திரம் என்று குறிப்பிட்டோம். சில பகுதிகள் வருமாறு:-

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்

என்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் பின்பற்றத்தக்க உயர்ந்த
நெறிகள் பலவற்றை உள்ளடக்கியது திருமந்திரம் என்று
குறிப்பிட்டோம். சில பகுதிகள் வருமாறு:-

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (85)
ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் (250)

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் (1823)

குரு உபதேசம்-முதல் தந்திரம் – 4. உபதேசம்

06/11/2011

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. 

 

`பெத்தநிலை நீங்கும் பருவத்துச் சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான்` எனவும், `அத் திருவடி ஞானத்தைப் பெற்றபின் நிகழ்வன இவை` எனவும் முறைப்படக்கூறி முடித்தபின், அப்பேறு அனைத்தையும் வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தியில்லதோர் குற்றமாம் ஆதலின், அக்குற்றத் திற்கு ஆளாகாது என்றும் அக்குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.
ஞான குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெய ராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.


%d bloggers like this: