Archive for July, 2011

சிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள்

07/31/2011

நாயக்கர் கோயில் ஓவியங்கள்

 • தமிழ்நாட்டில் கி.பி.17 ஆம் நூற்றாண்டில் செஞ்சியிலும் வேலூரிலும் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர் கால ஓவியங்கள் பல இடங்களில் உள்ளன. மதுரை நாயக்கர் கால ஓவியங்கள் வேலூர், தஞ்சை, மதுரை, நத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், இடைகால், ஸ்ரீரங்கம் போன்ற     இடங்களிலுள்ள கோயில்களில் காணப் படுகின்றன. தஞ்சை நாயக்கர் கால ஓவியங்கள் பட்டீசுவரம்,     சிதம்பரம்,     குறிச்சி, திருமங்கலக் குறிச்சி,     திருவாரூர், ஆவுடையார் கோயில் போன்ற இடங்களிலுள்ள கோயில்களில் உள்ளன. திருவண்ணாமலை, செங்கம் போன்ற இடங்களில் தமிழ் நாட்டின் வடபகுதியை ஆண்ட நாயக்க மன்னர் கால ஓவியங்கள் இருக்கின்றன.

 • சிதம்பரம் சிவகாமியம்மன் கோயில் முன் மண்டப விதானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவ பெருமான் அழித்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வோவியத்தில் சிவ பெருமான் பிட்சாடனர் வேடமிட்டுத் தாருகா வனத்தின் உள்ளே நுழைய அவரது பின்னே தாருகா வனத்து ரிஷி பத்தினிகள் மையல் கொண்டு செல்கின்றனர். மோகினி வடிவம் கொண்டு வந்த திருமாலின் பின்புறம் செருக்கழிந்த தாருகா வனத்து முனிவர்கள் செல்கின்றனர். ஆவுடையார் கோயில் ஓவியத்தில் மாணிக்க வாசகரின் வரலாறு சித்திரிக்கப் பட்டுள்ளது.

 • திருவண்ணாமலையில் மலை வலம் வருகின்ற சாலையில் எழுத்து மண்டபம் என்ற பெயரில் மண்டபம் ஒன்று உள்ளது. இதில் சிவ பெருமான் உமையை மணந்தது, இராமாயணம், ஆயர் மகளிரோடு கண்ணன் புரிந்த திருவிளையாடல்கள், முருகன் வள்ளியை மணந்தது ஆகியவை வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. திருவண்ணாமலைப் பகுதியிலுள்ள செங்கம் பெருமாள் கோயில் மண்டபத்தில் தெலுங்கு இராமாயணக் காட்சிகள் ஓவியமாக வரையப் பெற்றுள்ளன. இவற்றில் ஒரு காட்சியில் அனுமன் மண்டோதரியின் கூந்தலைப் பற்றி அடிப்பதாக உள்ள காட்சி வேறுபட்டதாகவும் புதுமையாகவும் உள்ளது.

 • சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயமும், வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் ஆலயமும் இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், நடனமாடும் நிலையில் இவ்வாலயத்தில் இருக்கிறார். நடனமாடும் நிலை இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர்.

 • நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.

 • சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.

 • வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில், நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச்சித்திரக்கூடம் பற்றி குறிப்பு உள்ளது.

 • இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்..

 • இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் பெயர்பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.

 • நடராசர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால், ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.

 • சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.

 • சிதம்பரம் நடராசர் கோயிலில் இடம் பெற்றுள்ள விசயநகர நாயக்கரது சிற்பங்கள் லெபாக்ஷி பாணியை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. அவற்றில் ரிசிபத்தினிகள் சிவபெருமானின் அழகில் மயங்கித் தமது ஆடைநெகிழ பின் தொடரும் காட்சி மிக அருமையாகத் தீட்டப்பட்டுள்ளது.

Advertisements

திருமூலநாயனார் புராணம்

07/24/2011

கயிலாயத் தொருசித்தர் பொதியிற் சேர்வார்
காவிரிசூழ் சாத்தனூர் கருது மூலன்
பயிலாநோ யுடன்வீயத் துயரம் நீடும்
பசுக்களைக்கண்டு அவனுடலிற் பாய்ந்துபோத
அயலாகப் பண்டையுடல் அருளால் மேவி
ஆவடுதண் டுறையாண்டுக்கு ஒருபா வாகக்
குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்
கோதிலா வடகயிலை குறுகி னாரே.

 

திருக்கைலாசத்திலே, சிவபெருமானது ஆலயத்துக்கு முதற்பெருநாயகராகிய திருநந்திதேவருடைய திருவருளைப் பெற்ற மாணாக்கர்களாகிய சிவயோகிகளுள் ஒருவர், அகத்திய மகாமுனிவரிடத்தே பொருந்திய நண்பினாலே அவருடன் சிலநாள் இருத்தற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் பொதியமலையை அடைதற்பொருட்டு, திருக்கைலாசத்தை அகன்று வழிக்கொண்டு, திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே சுவாமி தரிசனஞ்செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்திலே பசுக்கூட்டங்கள அழுதலை எதிரே கண்டார். சாத்தனூரில் இருக்கின்ற இடையனாகிய மூலனென்பவன் ஒருவன் அவைகளை மேய்க்கின்றவன். அவன் அத்தினத்திலே அவ்விடத்தில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவனுடைய சரீரத்தை வந்தணைந்து, சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோப்பனவாக; சிவயோகியார் கண்டு, “பரமசிவனது திருவருளினாலே இப்பசுக்களுடைய துயரத்தை நீக்கல் வேண்டும்” என்று ஆலோசித்து, “இவ்விடையன் உயிர் பெற்றெழுந்தாலன்றிப் பசுக்கள் துயரநீங்கா” என்று திருவுளங் கொண்டு தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவ்விடையனுடைய சரீரத்தினுள்ளே பிரவேசித்து, திருமூலராய் எழுதார். எழுதலும், பசுக்களெல்லாம் நாத்தழும்ப நக்கி மோந்து, கனைத்து, மிகுந்த களிப்பினாலே வாலெடுத்துத் துள்ளி, பின்புபோய் மேய்ந்தன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற்சென்று, அவைகளை நன்றாக மேய்த்தார். சூரியன் அஸ்தமயனமாக, பசுக்கள் தத்தங் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் வீடுகடோறும் போகத் தாம் வெளியிலே நின்றார்.

மூலனுடைய மனைவி “நாயகர் இன்றைக்கு மிகத் தாழ்த்தார்” என்று பயங்கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, “இவருக்கு ஈனம் அடுத்தது போலும்” என்று. அவருடைய திருமேனியைத் தீண்ட; அவர் அதற்கு இசையாராயினார். அவள் அச்சுற்று மயங்கி, “என்செய்தீர்” என்று, தளர, திருமூலநாயனார் “உனக்கு என்னோடு யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று மறுத்து, ஒரு பொதும்டத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அவ்விரவு முழுதிலும் நித்திரை செய்யாது கவலை கொண்டிருந்து, மற்ற நாள் அதனை விவேகிகள் பலருக்குத் தெரிவிக்க; அவர்கள் வந்து பார்த்து, அவளை நோக்கி, “இது பைத்தியமன்று, வேறு சார்புள்ளதுமன்று. இவர் கருத்துச் சிவயோகத்தினிடத்தேயாம். இனி இவர் உங்கள் சுற்றவியல்போடு கூடார்” என்றார்கள். அவள் அது கேட்டுத் துயரம் எய்தி மயங்க; அவர்கள் அவளைக் கொண்டு போய்விட்டார்கள்.

சிவயோகத்தில் இருந்து திருமூலநாயனார் எழுந்து, முதனாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தாஞ்சேமித்த சரீரத்தைக்காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, “சிவபெருமான் ஆதிகாலத்திலே தம்முடைய பஞ்சவத்திரத்தினின்றும் தோற்றுவித்த காமிக முதலிய சைவாகமங்களிலே பேசப்பட்ட மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுத் தமியேனைக்கொண்டு தமிழினாலே ஒரு நூல் செய்வித்தற் பொருட்டு இச்சரீரத்தை மறைத்தருளினார்” என்று தெளிந்து, திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்திலே பிரவேசித்து; சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப்பக்கத்தில் இருக்கின்ற அரசின் கீழே போய், சிவயோகத்தில் இருந்தார். அவர் மூவாயிரம் வருஷமளவு அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு திருப்பாட்டாக மூவாயிரம் திருப்பாட்டினால் சைவாகமங்களின் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரமென்னுந் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கைலாசத்தை அடைந்தார். திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்

அப்பூதியடிகணாயனார் புராணம்

07/24/2011

தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே
யினமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரா
னனமார் வயற்றிங்க ளுரினில் வேதிய னப்பூதியே.

அந்தமினற் றிங்களுர் வருமப் பூதி
யருமறையோர் திருநாவுக் கரசி னாமம்
பந்தரிடை யெழுதக்கண் டரக மெய்தப்
பணிந்துபரி கலநேடிப் படப்பை சேர்ந்த
மைந்தனுயி ருயர்கதலி யிலைமேற் றுஞ்சும்
வாளரவு கவரவுடன் மறைத்தல் கேட்டுச்
சிந்தைமகிழ்ந் துயர்பதிக மருந்தாற் றீர்த்துத்
திருவமுது செயவருளைச் சேர்ந்து ளாரே.

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகளெல்லாவற்றையும் தாங்கினவரும், கிருகஸ்தாச்சிரமத்தையுடையவரும், சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார். இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.

இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, “இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்” என்று வினாவ; அவர்கள் “இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்களெல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனாரென்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்” என்றார்கள். அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, “இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ” என்று நினைந்து, அவர்களை நோக்கி, “அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்” என்று வினாவ; “அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே” என்றார்கள். உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார். அப்பூதிநாயனார் “சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்” என்று வினாவ; திருநாவுக்கரசு நாயனார் ‘நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்’ உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்” என்று சொல்லி, பின்பு, “சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது” என்று வினாவ; அப்பூதிநாயனார் “நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்” என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்” என்றார்.

திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, “ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்” என்று அருளிச்செய்தார். உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார். திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்து, அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார். அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, “சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்” என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார். அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது. அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார். அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் “ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே” என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டு அப்பமூர்த்தியிடத்திற்சென்று “சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி “நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்” என்றார். அப்பூதிநாயனார் “இப்போது அவன் இங்கே உதவான்” என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, “அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்” என்றார். அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, “நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்” என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார். உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள். அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.

அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார்

காரைக்காலம்மையார் புராணம்

07/24/2011

நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு
மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்
செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.

தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க
தனதத்தன் றரும்புனித வதியார் மாவின்
செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு
திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க
வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி
யம்மையே யெனநாத னப்பா வென்று
பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற்
புனிதனட மனவரதம் போற்றி னாரே.

சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.

இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், “சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை” என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார்.

போயபின், பரமதத்தன் நடுப்பகலிலே வீட்டுக்கு வந்து போசனம்பண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, “மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை” என்றான். மனைவியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்தது.

அவர் அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ் சிறந்தமையால் “இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்” என்றான். மனைவியார் அதைக்கேட்டு, தமக்குத் திருவருள் உதவிய திறத்தை வெளிப்படுத்துவது தகுதியன்று என்று நினைந்தமையால் நிகழ்ந்ததைச் சொல்லமாட்டாதவரும், கணவனுக்கு உண்மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைந்தமையால் அதனைச் சொல்லாது விட மாட்டாதவருமாய் வருந்தி நின்று பின் நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணீந்து, “நீர் தந்த கனிகளில் ஒன்றை ஓரடியாருக்குக் கொடுத்து விட்டமையால், அதற்கு நான் யாது செய்வேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு நின்றேன். அவருடைய திருவருளினால் இந்தக் கனி அவருடைய திருவருளினாலே அழைத்துத் தா” என்றான். புனிதவதியார் அவ்விடத்தைவிட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, “இன்னும் ஒரு கனி தந்த தருளீராகில், அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும்” என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமியுடைய திருவருளினாலே ஒரு மாங்கனி அவர்கையில் வந்திருந்தது. அவர் அதைக் கொண்டு வந்து, கணவன்கையிற் கொடுக்க; அதன் ஆச்சரியமடைந்து வாங்கினான். வாங்கிய பழத்தைப் பின் காணாதவனாகி, மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன்கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், அவரோடு தொடர்பின்றி ஒழுகினான்.

ஒழுகு நாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும்பண்டங்களை அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனாகிய வருணனைத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணிகஞ்செய்து, சிலநாளாயின்பின், மீண்டும் அம்மரக்கலத்தில் ஏறி, பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒருவைசியனுடைய மகளை விவாகஞ்செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான். அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் தான்கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.

பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். அவருடைய சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டிலே ஓர் நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்துகொண்டு வாசகஞ்செய்கின்றான் என்று கேள்வியுற்று, அவனிடத்திற் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, கவலை கூர்ந்து, புனிதவதியாரைத் தாமே அவனிடத்திற்குக் கொண்டுபோய் விடவேண்டும் என்று நினைந்து, சிவிகையில் ஏற்றிக்கொண்டு சென்று, அவனிருக்கின்ற நகரத்திற்குச் சமீபித்து, தாம் புனிதவதியாரைக் கொண்டுவந்தமையை அவனுக்கு ஆள் அனுப்பித் தெரிவித்தார்கள். அவன் அதனை அறிந்து அச்சங்கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மகளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, “அடியேன் உம்முடைய கருணையினாலே வாழ்கின்றேன். இந்தப் பெண்ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்” என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தான். உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்களிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி, “நீ உன்னுடைய மனைவியை வணங்குவதென்னை” என்றார்கள். அதற்குப் பரமதத்தன்” இவரிடத்திலே ஒரு பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணேயன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன். இவரை நான் தொழுந்தெய்வம் என்று கொண்டமையால், நான் பெற்ற இந்தக் குழந்தைக்கு இவர் பெயரைத் தரித்தேன். அதுபற்றியே இவருடைய திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்’ என்றான், அதுகேட்ட சுற்றத்தார்கள் ‘இது என்ன ஆச்சரியம்” என்று திகைத்து நின்றார்கள். புனிதவதியார் கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, “சுவாமி! இவனுடைய கொள்கை இது, இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகு தங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவரீரைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்” என்று பிரார்த்தித்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினாலே, மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்களெல்லாம் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போகவிரும்பி, மனசிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்று, அந்தத்திருக்கைலாசகிரியின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே நடந்துபோய், மலையிலேறினார், ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, எம்போலிகள் புனிதவதியாருடைய திடப்பத்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தாராயின், நாம் எவ்வளவு ஆச்சரியம் அடைதல் வேண்டுமென்று சிந்திக்கச் செய்யும் பொருட்டுத் தாம் ஆச்சரியமுடையவராகி, அவரது பத்தி மகிமையை உயர்வொப்பில்லாத பரமசிவனுடைய திருவாக்கினாலே நமக்கு உணர்த்துவித்து நம்மை உய்விக்கத் திருவுளங்கொண்டு, அக்கடவுளை வணங்கி நின்று, “சுவாமீ! இங்கே தலையினால் நடந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை இருந்தபடி என்னை” என்று விண்ணப்பஞ்செய்ய, பரமசிவன் “இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றறி இந்தப் பெருமை பொருந்திய வடிவத்தையும் வேண்டிப் பெற்றாள்’ என்றார். பின் புனிதவதியார் சமீபத்தில் வந்தவுடனே உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, அவரை நோக்கி, “அம்மையே” என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் “அப்பா” என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, “உனக்கு வேண்டும் வரம் யாது” என்று வினாவ; புனிதவதியார் வணங்கி நின்று, “சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்.” என்று விண்ணப்பஞ்செய்தார். சுவாமி அவரை நோக்கித் “தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு” என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்று, சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, “கொங்கை திரங்கி” என்னும் மூத்த திருப்பதிகத்தையும், “எட்டியிலவமீகை” என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம்

07/24/2011

கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்
கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ
ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு
மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்
மண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம்
வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு
னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி
யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.

மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; “சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்” என்று நினைந்து, “இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்” என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.

குலச்சிறைநாயனார் புராணம்

07/24/2011

கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண்
குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா
மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி
மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி
காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற
கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று
நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த
நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே.

பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறைநாயனார் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராக்ஷந்தரிக்கின்றவர்களும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதுகின்றவர்களுமாகிய சிவனடியார்களை, உயர்குலம் இழிகுலங்களும் நற்குணம் தீக்குணங்களும் பாராமல் வணங்கித் துதிக்கின்றவர். அவ்வடியார்கள் பலர்கூடி வரினும், ஒருவர் வரினும், அன்பினோடு எதிர்கொண்டு அழைத்துத் திருவமுது செய்விக்கின்றவர். பரமசிவனுடைய திருவடிகளை அநுதினமுஞ் சிந்தித்துத் துதித்து வணங்குகின்றவர். நெடுமாறர் என்னும் பெயரையுடைய பாண்டியருக்கு முதன்மந்திரியாராயினவர். அந்தப்பாண்டியருடைய மாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் செய்கின்ற திருத்தொண்டுக்குத் துணைசெய்கின்றவர். கீழ்மக்களாகிய சமணர்களுடைய பொய்ச்சமயத்தைக் கெடுத்து, பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டு, பரசமய கோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கிய சிறப்பினையுடையவர். வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்று வித்தவர். சுந்தரமூர்த்திநாயனாராலே திருத்தொண்டத்தொகையிலே பெருநம்பி” என்று வியந்துரைக்கப்பட்டவர்

சண்டேசுரநாயனார் புராணம்

07/24/2011

வேதமலி சேய்ஞ்ஞலூ ரெச்ச தத்தன்
விளங்கியசேய் மறைபயிலும் விசார சன்மர்
கோதனமேய்ப் பவன்கொடுமை பொறாது தாமே
கொண்டுநிரை மண்ணியின்றென் கரையி னீழற்
றாதகியின் மணலிலிங்கத் தான்பா லாட்டத்
தாதைபொறா தவையிடறுந் தாள்கண் மாளக்
காதிமலர்த் தாமமுயர் நாமமுண்ட
கலமகனாம் பதமருளாற் கைக்கொண் டாரே.

சோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன், இருந்தான். அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு ஐந்துவயசிலே, வேதங்களையும் வேதாங்கங்களையும் சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறிவுமறிவு உண்டாயிற்று, தந்தை தாயர்கள் அவருக்கு ஏழுவயசிலே உபநயனச்சடங்கு செய்து, தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதத்தியயனஞ் செய்விப்பிக்கத் தொடங்கினார்கள். அவ்வாசாரியர்கள் வேதங்களையும் பிறகலைகளையும் ஓதுவித்தற்கு முன்னமே அவ்விசாரசருமருக்குத் தாமே அறிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்ற புத்தியின் திறத்தைக் கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள்.

பாலியதசையிலே சான்றோர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர், ஆன்மாக்களாகிய நாமெல்லாம் அநாதிமலபெத்தர் என்பதும், நமக்கு அம்பல சத்தியைக் கொடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும் பொருட்டுச் சிருட்டிதிதி சம்காரம் திரோபவம் அநுக்கிரகம் என்கின்ற பஞ்ச கிருத்தியங்களையும் செய்வாராகிய ஒருபதி உண்டு என்பதும், அப்பதிக்குத் தம்வயத்தராதல், தூயவுடம்பினராதல், இயற்கையுணர்வினராதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல்; பேரருளுடைமை முடிவிலாற்றலுடைமை வரம்பிலின்பமுடைமை என்னும் எட்டுக்குணங்களும் இன்றியமையாதன என்பதும், அக்குணங்களெல்லாம் உடைய பதி சிவபெருமானே என்பதும், அவர் அத்தொழில் இயற்றுதல் தம்மோடொற்றுமையுடைய சிவசத்தியாலாகும் என்பதும், அதுபற்றி அவ்விருவருமே நமக்குப் பரமபிதா மாதாக்கள் என்பதும், அதனால் அவர்களிடத்தேயே நாம் அன்புசெய்யவேண்டும் என்பதும் அவ்வன்பை மற்றோர் பிறவியில் செய்குவமெனின் அதற்குக் கருவியாய்ச் சிறந்துள்ள இம்மானுடப்பிறவி பெறுதற்கரியது என்பதும், அப்படியாகில் இப்பிறவியிற்றானே இன்னுஞ்சிலநாட் சென்றபின் செய்குவமெனின் இப்பிறவி நீங்குமவதி அறிதற்கரியது என்பதும், அங்ஙனமாகையால் அவ்வன்பு செய்தற்கேயன்றி மற்றொன்றிற்கும் சமயமில்லை என்பதும், அது செய்யுமிடத்தும் நமக்கு ஓர்சாமர்த்தியமுளதெனக் கருதி அதனை முன்னிடாது திருவருளையே முன்னிட்டு நின்று செய்ய வேண்டும் என்பதுமே வேதாகம முதலிய நூல்களெல்லாவற்றானும் துணியப்படும் மெய்ப்பொருள் என்று சந்தேகவிபரீதமறத் துணிந்து கொண்டார். அந்த யதார்த்தமாகிய துணிவு தோன்றவே, அவருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன்பு கலைதோறும் வளர்வதாயிற்று.

ஒருநாள் அவர் தம்மொடு அத்தியயனஞ் செய்கின்ற பிள்ளைகளோடும் அவ்வூரவர்களுடைய பசுநிரைகளுடன் கூடிச்சென்றபொழுது, ஓரீற்றுப்பசு ஒன்று மேய்ப்பானாகிய இடையனைக் குத்தப்போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்தான் மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதை பதைப்போடும் அவன் சமீபத்திற்சென்று, மகாகோபங்கொண்டு, பின்னும் அடியாதபடி அவனைத் தடுத்து நின்று, பசுக்கள் சிவலோகத்தினின்றும் பூமியில் வந்த வரலாற்றையும், அவைகளின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருத்தலையும், அவை தரும் பஞ்சகவ்வியங்கள் சிவபிரானுக்கு அபிஷேகத் திரவியமாதலையும், சிவசின்னமாகிய விபூதிக்கு மூலம் அவற்றின் சாணமாதலையும் சிந்தித்து, அந்தப்பசுக்களைத் தாமே மேய்க்கும்படி விரும்பி, அவ்விடையனை நோக்கி, “இப்பசுநிரையை இனி நீ மேய்க்கவேண்டியதில்லை. நானே மேய்ப்பேன்” என்றார் இடையன் அதைக்கேட்டுப் பயந்து கும்பிட்டுக் கொண்டு போய்விட்டான்.

விசாரசருமர் பசுக்களை அவ்வற்றிற்குரிய பிராமணர்களின் சம்மதிபெற்று, தினந்தோறும் மண்ணியாற்றங்கரையில் இருக்கின்ற காடுகளிலும் வயரோரங்களிலும், புல்லு நிறைந்திருக்கும் இடத்திற் கொண்டுபோய் வேண்டுமட்டும் மேயவிட்டும், தண்ணீரூட்டியும், வெய்யிலெறிக்கும்பொழுது நிழலிருக்குமிடங்களிலே செலுத்தியும், நன்றாகக் காப்பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக்கொண்டு அஸ்தமயனத்துக்குமுன் அவ்வப்பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டு, தம்முடைய வீட்டுக்குப் போவார்.

இப்படிச் செய்யுங்காலத்திலே, பசுநிரைகளெல்லாம் அழகோடு மிகப்பெருகி, போசனபானங்களிலே குறைவில்லாமையால் மகிழ்ச்சியடைந்து, இராப்பகல் மடிசுரந்து பாலை மிகப் பொழிந்தன. பிராமணர்கள் நித்திய ஓமாகுதியின் பொருட்டு விட்டிருக்கின்ற தங்கள் பசுக்கள் விசாரசருமர் மேய்க்கத் தொடங்கியபின் முன்னிலும் அதிகமாகக் கறக்கக்காண்கையால் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார்கள். பசுக்கள் எல்லாவகை யுபசரிப்பினாலும் அளவிறந்த களிப்பை அடைந்து, வீட்டிலே கட்டப்பட்டிருக்கின்ற தங்கள் கன்றுகள் பிரிந்தாலும் சிறிதும் வருத்தமுறாதவைகளாகிய, மிகுந்த அன்போடு தங்களைமேய்க்கின்ற விசாரசருமர் சற்றாயினும் பிரிவாராகில் அப்பிரிவாற்றாமல் தாய்போல உருகி, அவர் சமீபத்திலே சென்று கனைத்து, மடிசுரந்து ஒருவர் கறக்காமல் தாமே பால்பொழியும். அது கண்ட விசாரசருமர் அப்பால் பரமசிவனுக்குத் திருமஞ்சனமாந் தகுதியுடைமை நினைந்தார். நினையவே அவருக்குச் சிவார்ச்சனையினிடத்தே பேராசை தலைப்பட்டது. உடனே அவர் மண்ணியாற்றின் கரையிலிருக்கின்ற ஒரு மணற்றிட்டையிலே திருவாத்திமரத்தின் கீழே மணலினாலே ஒரு சிவலிங்கங்குவித்து, திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் வகுத்து, திருவாத்திப்பூ முதலிய புஷ்பங்களும் பத்திரமும் பறித்துத் திருப்பூங்கூடையிலிட்டுக்கொண்டு வந்து வைத்துவிட்டு, புதிய குடங்களைத் தேடி வாங்கிக் கொண்டு வந்து, கறவைப் பசுக்கள் ஒவ்வொன்றினிடத்திலும் சென்று, முலையைத் தீண்டினார். அவைகள் கனைத்துப் பாலைப்பொழிந்தன. பாலினாலே நிறைவுற்ற அக்குடங்களைக் கொண்டுபோய் ஆலயத்திலே வைத்துப் பத்திரபுஷ்பங்களால் சுவாமியை அருச்சித்து, பாலினால் அபிஷேகஞ்செய்தார். பரமசிவன் அவ்விலிங்கத்தினின்று அவ்விசாரசருமர் அன்போடு செய்யும் அருச்சனையைக் கொண்டருளினார்; விசாரசருமர் சிவபூசைக்கு அங்கமாகிய திருமஞ்சனம் முதலிய பொருள்களுள், கிடையாதவைகளை மானசமாகக் கிடைத்தனவாகக் கொண்டு நிறைவு செய்து, விதிப்படி அருச்சித்து வணங்கி வந்தார். பசுக்கள் அபிஷேகத்தின்பொருட்டு இவ்விசாரசருமர் கொண்டு வரும் குடங்கள் நிறையப் பாலைச் சொரிந்தும், பிராமணர்க்கும் முன்போலக் குறைவுதீரப் பாலைக் கொடுத்துவந்தன.

இப்படி நெடுநாளாகப் பார்ப்பவர்களுக்கு விளையாட்டுப் போலத் தோன்றி சிவார்ச்சனையைச் செய்து வரும்பொழுது, அதைக்கண்ட ஒருவன் அதின் உண்மையை அறியாதவனாகி, அதை அவ்வூர்ப்பிராமணர்களுக்குத் தெரிவித்தான். அவர்கள் அதைச் சபையாருக்குத் தெரிவிக்க; சபையார் எச்சத்தனை அழைத்து, “பிராமணர்கள் ஓமாகுதியின் பொருட்டுப் பால் கறக்கும் பசுக்களையெல்லாம் உம்முடைய புத்திரனாகிய விசாரசருமன் அன்புடனே மேய்ப்பவன் போலக் கொண்டு போய்ப் பாலைக் கறந்து விருதாவாக மணலிலே சொரிந்து விளையாடுகின்றான்” என்றார்கள். எச்சதத்தன் அதைக் கேட்டுப் பயந்து, “சிறுபிள்ளையாகிய விசாரசருமன் செய்கின்ற இந்தச் செய்கையை இதற்குமுன் நான் சிறிதாயினும் அறிந்திலேன். அக்குற்றத்தை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்” என்று குறையிரந்து வணங்கி, “இனி அவன் அப்படிச் செய்வானாயின், அக்குற்றம் என்மேலதாகும்” என்று சொல்லி அச்சபையாரிடத்திலே அநுமதி பெற்றுக்கொண்டு, வீட்டுக்குப் போய் விட்டான்.

மற்றநாட்காலையில் அந்தச் சமாசாரத்தைச் சோதித்தறிய விரும்பி, விசாரசருமர் பசு மேய்க்கப்போனபின்பு, அவர் அறியாதபடி அவர்பின்னே சென்றான். விசாரசருமர் பசுக்களை ஓட்டி மண்ணியாற்றின் மணற்றிட்டையிலே கொண்டுபோனதைக்கண்டு, எச்சதத்தன் அருகில் இருந்த ஒருகுராமரத்தில் ஏறி அங்கே நிகழ்வதை அறியும்படி ஒளிந்திருந்தான். விசாரசருமர் ஸ்நானம் பண்ணி, முன் போல மணலினாலே திருக்கோயிலுஞ் சிவலிங்கமுஞ்செய்து, பத்திரபுஷ்பங்கள் பறித்துக்கொண்டுவந்து வைத்து, பின்பு பாற்குடங்களைக் கொண்டுவந்து தாபித்து, அருச்சனைக்கு வேண்டிய பிறவற்றையும் அமைத்து, மிகுந்த அன்பினோடு பூசைக்கு ஆரம்பித்து, சிவலிங்கத்துக்குப் பத்திரபுஷ்பங்களைச் சாத்தி, பாற்குடங்களை எடுத்து அபிஷேகம் பண்ணினார். குராமரத்தில் ஏறியிருந்த எச்சதத்தன் அதைக் கண்டு, மிகுந்த கோபங்கொண்டு சீக்கிரம் இறங்கிப்போய்த் தன் கையிலிருந்த தண்டினால் அவ்விசாரசருமருடைய திருமுதுகிலே அடித்துக் கொடுஞ் சொற்களைச் சொல்ல; அவருடைய மனம் பூசையிலே முழுவதும் பதிந்து கிடந்தபடியால் அது அவருக்குப் புலப்படவில்லை பின்னும் எச்சதத்தன் கோபங்கொண்டு பலமுறையடிக்க; விசாரசருமர் அவ்வடியாலாகிய வருத்தந் தோன்றிப் பெறாதவராகி, அபிஷேகத்திருத் தொண்டினின்றுந் தவறாதிருந்தார். அவருடைய உள்ளன்பை அறியாத எச்சதத்தன் மிகக் கோபித்துத் திரு மஞ்சனப் பாற்குடத்தைக் காலினால் இடறிச் சிந்தினான். உடனே விசாரசருமர் அதைக்கண்டு, அது செய்தவன் பிதாவும் பிராமணனும் குருவுமாகிய எச்சதத்தனென்ன்பதை அறிந்தும், அவன் செய்தது அதிபாதகமாகிய சிவாபராத மாதலால், அவன் காலைத் துணிக்கக்கருதித் தமக்குமுன் கிடந்த ஒரு கோலை எடுக்க. அது மழுவாயிற்று. அதினாலே அவன் கால்களை வெட்டினார். சிவபூசைக்கு வந்த அவ்விடரை நீக்கியவராகிய விசாரசருமர் முன்போல அருச்சனை செய்ய; சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றியருளினார் விசாரசருமர் அது கண்டு மனம்களிந்து விழுந்து நமஸ்கரித்தார். பரமசிவன் அவரை தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, “நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா” என்று அருளிச்செய்து; அவரை அணைத்து, அவருடைய திருமேனியைத் தடவி உச்சிமோந்தருளினார். சிவபிரானுடைய திருக்கரத்தினாலே தீண்டப்பட்ட அவ்விசாரசருமருடைய திருமேனி சிவமயமாகித் திவ்வியப் பிரகாசத்தோடு விளங்கிற்று. பரமசிவன் அவரை நோக்கி, நாம் நம்முடைய தொண்டர்களுக்கெல்லாம் உன்னைத் தலைவனாக்கி, நாம் ஏற்றுக்கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தந்தோம்” என்று திருவாய்மலர்ந்து, தம்முடைய சடையிலே தரித்திருக்கின்ற கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினார். அவ்விசாரசருமர், சமஸ்தரும் ஆரவாரிக்கவும், எவ்விடத்தும் புஷ்பமழைபொழியவும், சிவகணங்கள் பாடியாடிக் களிகூரவும், வேதங்கள் கோஷிக்கவும், நானாபேதவாத்தியங்கள் முழங்கவும், சைவசமயம் நிலை பெறும்படி பரமசிவனைக் கும்பிட்டு. அவராலே தரப்பட்ட சண்டேசுரபதத்தை அடைந்தார். எச்சதத்தர் சிவத்துரோகஞ்செய்தும், சண்டேசுரநாயனாராலே தண்டிக்கப்பட்டமையால், அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தார்.

திருக்குறிப்புத்தொண்டநாயனார் புராணம்

07/24/2011

கொந்தலர்பூம் பொழிற்கச்சிநகரே காலிக்
குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்து ளார்பால்
வந்திறைவர் நமக்கின்று தாரீ ராகின்
வருந்துமுட லெனவாங்கி மாசு நீத்த
கந்தைபுல ராதொழிய மழையு மாலைக்
கடும்பொழுதும் வரக்கண்டு கலங்கிக் கன்மேற்
சிந்தமுடி புடைப்பளவிற் றிருவே கம்பர்
திருக்கைகொடு பிடித்துயர்வான் சேர்த்தி னாரே.

தொண்டைமண்டலத்திலே, காஞ்சீபுரத்திலே, ஏகாலியர் குலத்திலே, சிவனடியார்களுடைய திருக்குறிப்பையறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்கின்றமையால் திருக்குறிப்பையறிந்து அவர்களுக்கு தொண்டு செய்கின்றமையால் திருக்குறிப்புத்தொண்டர் எனப்பெயர் பெற்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகுந்த விருப்பத்தோடு சிவபத்தர்களுக்கு வஸ்திரம் ஒலித்துக் கொடுத்து வருங்காலத்திலே, ஏகாம்பர நாதசுவாமி குளிர்காலத்தில் ஒரு சிவபத்தர் வேடங்கொண்டு மெலிந்த சரீரத்தையுடைய ஒரு வறியவர் போலாகி, அழுக்கடைந்த கந்தையுடன் அவரிடத்திற் சென்றார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் அவரைக் கண்டு எதிர் கொண்டு வணங்கி, பல உபசார வார்த்தைகளைச் சொல்லி அவருடைய குறிப்பையறிந்து, “உந்தக் கந்தையைத் தந்தருளும்; ஒலித்துத் தருகின்றேன்” என்றார் சிவபத்தர் வேடங்கொண்ட கடவுள். “இந்தக் கந்தை அழுக்கு அதிகமாக ஏறப்பெற்றுத் தகுதியில்லாத தாயிருந்தாலும், குளிர் மிகுதியினால் வருத்த முறுகின்ற படியால் கைவிடுதல் கூடாது. அஸ்தமயனத்திற்கு முன் தருவீராகில், கொண்போய்ச் சீக்கிரம் ஒலித்துக்கொண்டு வாரும்” என்றார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் ‘அடியேன் தாழ்க்காமல் ஒலித்து அஸ்தமயனத்திற்கு முன் கொண்டுவந்து தருகின்றேன்; தந்தருளும்” என்று சொல்ல; சுவாமி “விரைவிலே ஒலித்து உலர்த்தித் தராதொழிவீராயில், இந்தத் தேகத்துக்குத் துன்பஞ்செய்தீர்” என்று சொல்லி, அக்கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.

திருக்குறிப்புத்தெகண்டநாயனார் அதை வாங்கிக்கொண்டு ஒரு குளத்திற்சென்று, முன் சிறிதழுக்குப் போக்கி வெள்ளாவியில் வைத்து, பின் ஒலிக்கப்புகுந்தார். அப்பொழுது பரமசிவனுடைதி திருவருளினாலே நண்பக லொழிந்து பின்பகல்போலத் தோன்றும் படி மேகங்கள் இருண்டு ஆகாயவெளியெல்லாம் மறைத்து மழைபெய்தன. அது கண்டு, திருக்குறிப்புத்தொண்டர் சிவபத்தருக்குத் தாம் வாக்குச் செய்ததை நினைந்து, “இனி நான் யாதுசெய்வேன்” என்று கவலையுற்று. விரைவிலே மழைவிடவுங் கூடுமென்று அங்கே தானே நின்றார். அது விடவில்லை. பின் இராக்காலம் வர, திருக்குறிப்புத்தொண்டர் “குளிரினாலே திருமேனி நடுங்குகின்ற சிவபத்தருக்கு நான்செய்யவிரும்பிய பணிவிடை, ஐயையோ! தவறிப்போயிற்றே” என்று கீழே விழுந்தார். மழைவிடாது; சிவபத்தர் சுட்டிய காலமோ நீங்கிற்று. முன்னேயே ஒலித்தது வீட்டிலே காற்றினல் உலரும்படி கட்டிவிட்டேனுமில்லை. சிவபத்தரது திருமேனி குளிரினால் வருந்தும்படி தீங்குசெய்த சிறியேனுக்கு இனியதுவே செயல்” என்று எழுந்தார். “வஸ்திரங்களைப் புடைக்கின்ற கற்பாறையிலே எனது தலையைச் சிந்தும்படி சர்வவியாபகராகிய பரமசிவனுடைய திருக்கரம் அந்தக் கற்பாறையின் பக்கத்திலே தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது ஆகாயத்தினின்று சொரிந்த நீர்மழை நீங்கிப் பூமழை பொழிந்தது. பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய்க் காட்சி கொடுத்தருளினார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் மிகுந்த அன்பினோடு விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ்சலி செய்துகொண்டு நின்றார். பரமசிவன் அவரை நோக்கி, “உனது பத்திவலிமையை மூவுலத்தர்களுக்குந் தெரிவித்தோம். இனி நீ நம்முடைய உலகத்தையடைந்து பேரின்பம் பெற்று வாழ்ந்திரு” என்று திருவருள் புரிந்து சென்றருளினார்.

திருநாளைப்போவார்நாயனார் புராணம்

07/24/2011

நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்
மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ
நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்
பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்
பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி
வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த
வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற
மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்
விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

சோழமண்டலத்திலே கொள்ளிடநதியின் பக்கத்துள்ள மேற்காநாட்டிலே, ஆதனூரிலே, புலையர்குலத்திலே, நந்தனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி, மற்றொன்றையும் மறந்தும் நினையாதவர். அவ்வூரிலே தமக்கு வெட்டிமைக்காக விடப்பட்டிருக்கின்ற மானியமாகிய நிலத்தின் விளைவினாலே சீவனஞ் செய்து கொண்டு, தாஞ்செய்யவேண்டும் தொழிலை நடத்துகின்றவர்; சிவாலயங்கடோறும், பேரிகைமுதலாகிய ஒருமுகக்கருவிகளுக்கும் மத்தளமுதலாகிய இருமுகக்கருவிகளுக்கும் தோலும் வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுக்கின்றவர்; ஆலயங்களின் திருவாயிற்புறத்தில் நின்றுகொண்டு அன்பின் மேலீட்டினால் கூத்தாடிப் பாடுகின்றவர்.

அவர் ஒருநாள் திருப்புன்கூரிலே போய்ச் சுவாமிதரிசனம் பண்ணித் திருப்பணி செய்தற்கு விரும்பி, அங்கே சென்று திருக்கோயில்வாயிலிலே நின்றுகொண்டு, சுவாமியை நேரே தரிசித்துக் கும்பிடவேண்டும் என்று நினைத்தார். சுவாமி அவருடைய விருப்பத்தின்படியே தமக்கு முன்னிருக்கின்ற இடபதேவரை விலகும்படி செய்து, அவருக்குக் காட்சி கொடுத்தருளினார். நந்தனார் அந்த ஸ்தலத்திலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரிய குளமாக வெட்டித் தம்முடைய ஊருக்குத் திரும்பினார்.

அவர் இப்படியே பல ஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்து வந்தார். ஒருநாள், சிதம்பர ஸ்தலத்திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு, அவ்வாசை மிகுதியினாலே அன்றிரவு முழுதும் நித்திரை செய்யாதவராகி, விடிந்தபின் “நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே” என்று துக்கித்து, “இதுவும் சுவாமியுடைய அருள்தான்” என்று சொல்லிப் போகாதொழிந்தார். பின்னும் ஆசைவளர்தலால் “நாளைக்குப் போவேன்” என்றார். இப்படியே “நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன்” என்று அநேக நாட்கள் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.

ஒருநாள் அவர் சிதம்பர தரிசனம் பண்ணவேண்டும் என்னும் ஆசை பிடித்துந்துதலால், தம்முடைய ஊரினின்றும் பிரஸ்தானமாகி, சிதம்பரத்தின் எல்லையை அடைந்தார்.

அத்திருப்பதியைச் சுற்றிய திருமதில்வாயிலிலே புகுந்து, அங்குள்ள பிராமணர்களுடைய வீடுகளிலே ஓமஞ் செய்யப்படுதலைக் கண்டு, உள்ளே போதற்கு அஞ்சி, அங்கே நமஸ்கரித்து அத்திரு வெல்லையை வலஞ்செய்துகொண்டு போவார். இப்படி இராப்பகல் வலஞ் செய்து உள்ளே போகக் கூடாமையை நினைத்து வருந்துகின்ற திருநாளைப்போவார் “சபாநாயகரை எப்படித் தரிசிக்கலாம்? இந்த இழிந்த பிறப்பு இதற்குத் தடைசெய்கின்றதே! என்று துக்கத்தோடும் நித்திரை செய்தார். சபாநாயகர் அவருடைய வருத்தத்தை நீக்கி அவருக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு, அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, “நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து, பிராமணர்களோடும் நம்முடைய சந்நிதானத்தில் வருவாய் என்று அருளிச்செய்து, தில்லைவாழ்ந்தணர்களுக்கும் சொப்பனத்திலே தோன்றி, அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். தில்லை வாழந்தணர்கள் எல்லாரும் விழித்தெழுந்து, திருக்கோயிலிலே வந்துகூடி, சபாநாயகர் ஆஞ்ஞாபித்தபடி செய்வோம்” என்று சொல்லி, திருநாளைப்போவாரிடத்திலே சென்று “ஐயரே! சபாநாயகருடைய ஆஞ்ஞையினாலே இப்பொழுது உம்பொருட்டு நெருப்பு வளர்க்கும்படி வந்தோம்” என்றார்கள். அதைக்கேட்ட திருநாளைப்போவார் “அடியேன் உய்ந்தேன்” என்று சொல்லி வணங்கினார். பிராமணர்கள் தென்மதிற்புறத்திலே கோபுரவாயிலுக்கு முன்னே ஒரு குழியிலே நெருப்பு வளர்த்து, அதைத் திருநாளைப் போவாருக்குப் போய்த் தெரிவித்தார்கள். திருநாளைப்போவார் அந்நெருப்புக் குழியை அடைந்து, சபாநாயகருடைய திருவடிகளை மனசிலே தியானம் பண்ணி, அதனை வலஞ்செய்து கும்பிட்டுக்கொண்டு, அதனுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அந்தத் தேகத்தை ஒழித்து, புண்ணிய மயமாகிய பிராமணமுனி வடிவங்கொண்டு உபவீதத்தோடும் சடைமுடியோடும் எழுந்தார். அதுகண்டு தில்லைவாழந்தணர்களும் மற்றைச் சிவபத்தர்களும் அஞ்சலிசெய்து களிப்படைந்தார்கள். திருநாளைப்போவார், அவர்கள் உடன் செல்லச் சென்று கோபுரத்தை அணுகி, அதனை நமஸ்கரித்து எழுந்து, உள்ளே போய் கனகசபையை அடைந்தார். பின் அவரை அங்கு நின்ற பிராமணர் முதலியோர் யாவரும் காணாமையால் ஆச்சரியங்கொண்டு ஸ்தோத்திரஞ் செய்தார்கள். சபாநாயகர் திருநாளைப்போவாருக்குத் தம்முடைய ஸ்ரீபாதங்களைக் கொடுத்தருளினார்.

உருத்திரபசுபதிநாயனார் புராணம்

07/24/2011

பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும்
பசுபதியா ரெனுமறையோர் பணிந்து செந்தே
னங்கமல மடுவினிடை யல்லு மெல்லு
மகலாதே யாகளமா யமர்ந்து நின்று
திங்கள்வளர் சடைமுடியா னடிகள் போற்றித்
திருவெழுத்து முருத்திரமுந் திகழ வோதி
மங்கையிட முடையபிரா னருளான் மேலை
வானவர்க டொழுமுலகின் மன்னி னாரே.

சோழநாட்டிலே, திருத்தலையூரிலே, பிராமணகுலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளிலே பதிந்த அன்பே தமக்குச் செல்வமெனக் கொண்ட பசுபதி என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தாமரைத்தடாகத்திலே அகோராத்திரம் கழுத்தளவினதாகிய தண்ணீரிலே நின்றுகொண்டு, இரண்டு கைகளையும் சிரசின்மேலேறக் குவித்து, பரமசிவனுடைய திருவடிகளை மறவாத சிந்தனையோடு வேதபுருஷனுக்குக் கண்ணாகிய ஸ்ரீ ருத்திரத்தை ஓதி, சிலநாட்சென்றபின் சிவபதத்தை அடைந்தார். அதனால் அவர்பெயர் உருத்திரபசுபதி நாயனார் என்றாயிற்று


%d bloggers like this: