கண்ணப்பநாயனார் புராணம்


நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே
னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி
வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே.

வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்
விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்
காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்
காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்
தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்
சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ
ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப
வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே.

பொத்தப்பிநாட்டிலே, உடுப்பூரிலே, வேடர்களுக்கு அரசனாகிய நாகன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவிபெயர் தத்தை. அவ்விருவரும் நெடுங்காலம் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதிதுக்கங்கொண்டு குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாகிய சுப்பிரமணியசுவாமியுடைய சந்நிதானத்திலே சேவற்கோழிகளையும், மயில்களையும் விட்டு, அவரை வழிபட்டு வந்தார்கள்

சுப்பிரமணியசுவாமியுடைய திருவருளினாலே தத்தையானவள் கருப்பவதியாகி, ஒரு புத்திரனைப் பெற்றாள். அப்பிள்ளையை நாகன் தன் கையிலே எடுத்தபொழுது திண்ணெனவாயிருந்தபடியால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டான். அத்திண்ணனார் வளர்ந்து உரிய பருவத்திலே வில்வித்தை கற்கத் தொடங்கி, அதிலே மகாசமர்த்தராயினார், நாகன் வயோதிகனானபடியால், வேட்டைமுயற்சியிலே இளைத்தவனாகி, தன்னதிகாரத்தைத் தன்புத்திரராகிய திண்ணனாருக்குக் கொடுத்தான்.

அந்தத்திண்ணனார் வேட்டைக் கோலங்கொண்டு வேடர்களோடும் வனத்திலே சென்று வேட்டையாடினார், வேட்டையாடும்பொழுது, ஒருபன்றியானது வேடராலே கட்டப்பட்ட வலையறும்படி எழுந்து, மிகுந்த விசையுடனே ஓடியது. அதைக் கண்ட திண்ணனார் அதைக்கொல்ல நினைந்து, அதைத் தொடர்ந்து பிடிக்கத்தக்க விசையுடனே அது செல்லும் அடிவழியே சென்றார். நாணன் காடன் என்கின்ற இரண்டு வேடர்கண்மாத்திரம் அவருக்குப் பின் ஓடினார்கள். அந்தப்பன்றி நெடுந்தூரம் ஓடிப்போய், இளைப்பினாலே மலைச்சாரலிலே ஒருமரத்தின் நிழலிலே நின்றது. திண்ணனார் அதைக் கண்டு அதனைச் சமீபித்து, உடைவாளை யுருவி அதனை இருதுண்டாகும்படி குத்தினார். நாணனும் காடனும் இறந்துகிடந்த அந்தப் பன்றியைக் கண்டு திண்ணனாரை வியந்து வணங்கி, “நெடுந்தூரம் நடந்து வந்த படியால் பசி நம்மை மிகவருத்துகின்றது. நாம் இந்தப்பன்றியை நெருப்பிலே காய்ச்சித் தின்று, த்ண்ணீர் குடித்துக்கொண்டு வேட்டைக்காட்டுக்கு மெல்லப்போவாம்” என்றார்கள். திண்ணனார் அவர்களை நோக்கி, “இவ்வனத்திலே தண்ணீர் எங்கே இருக்கின்றது” என்று கேட்க; நாணன் “அந்தத் தேக்கமரத்துக்கு அப்புறம் போனால், மலைப்பக்கத்திலே பொன்முகலி யாறு ஓடுகின்றது” என்றன். அதைக்கேட்ட திண்ணனார் “இந்தப் பன்றியை எடுத்துக்கொண்டு வாருங்கள்; நாம் அங்கே தானே போவோம்” என்று சொல்லி, அதை நோக்கி; நடந்து, அரைக்காதவழி தூரத்துக்கு அப்பால் இருக்கின்ற திருக்காளத்தி மலையைக் கண்டு, நாணனை நோக்கி, “நமக்குமுன்னாகத் தோன்றுகின்ற மலைக்குப் போவோம்” என்று சொல்ல; நாணன் “இந்தமலையிலே, குடுமித்தேவர் இருக்கிறார். நாம் போனாற் கும்பிடலாம்” என்றான்.

திண்ணனார் “இந்தமலையைக் கண்டு இதை அணுக அணுக என்மேல் ஏற்றப்பட்ட பெரிய பாரம் குறைகின்றது போலும். இனி உண்டாவது யாதோ! அறியேன்” என்று சொல்லி அதிதீவிரமாகிய விருப்பத்தோடும் விரைந்து சென்று, பொன்முதலியாற்றை அடைந்து, அதன் கரையிலிருக்கின்ற மரநிழலிலே, கொண்டுவந்த பன்றியை இடுவித்து, காடனைநோக்கி “தீக்கடைகோல் செய்து நெருப்பை உண்டாக்கு; நாங்கள் இம்மலையிலே ஏறி, சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு வந்து சேருவோம்” என்று சொல்லி, நாணனோடும் அந்தப் பொன்முகலிநதியைக் கடந்து, மலைச்சாரலை அடைந்து, மலையிலே நாணன் முன்னே ஏற, தாமும் அளவில்லாத பேராசையோடும் ஏறிச் சென்று சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருத்தலைக் கண்டார், கண்டமாத்திரத்திலே, பரமசிவனுடைய திருவருட்பார்வையைப் பெற்று, இரும்பானது தரிசனவேதியினாலே உருவம் மாறிப் பொன்மயமானாற்போல முன்னுள்ள குணங்கள் மாறிச் சிவபெருமானிடத்தில் வைத்த அன்புருவமானார். நெடுங்காலம் பிரிந்திருந்த தன் குழந்தையைக் கண்ட மாதாவைப்போலத் தாழாமல் விரைந்தோடி, தோள்கள் ஞெமுங்கும்படி அக்கடவுளைத் தழுவி, மோந்து முத்தமிட்டார். நெடுநேரம் பெருமூச்சுவிட்டுக்கொண்டு நின்று, சரீரம் முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள. இரண்டு கண்ணினின்றும் கண்ணீர் சொரிய வெயிலிடைப்பட்ட மெழுகு போல மனங்கசிந்துருக. “இந்தச்சுவாமி அடியேனுக்கு அகப்பட்டது என்ன ஆச்சரியம்” என்று சொல்லி ஆனந்தங் கொண்டார். “ஐயையோ! சிங்கம் யானை புலி கரடி துட்ட மிருகங்கள் சஞ்சரிக்கின்ற காட்டிலே நீர் யாதொரு துணையுமின்றி வேடர்போலத் தனியே இருப்பது ஏது” என்று சொல்லித் துக்கித்து, தம்முடையகையில் இருந்த வில்லுக் கீழே விழுந்ததையும் அறிந்தவரகிப் பரவசமடைந்தார். பின் ஒருவாறு தெளிந்து “இவருடைய முடியிலே நீரை வார்த்துப் பச்சிலையையும் பூவையும் இட்டவர் யாரோ” என்றார். அப்பொழுது சமீபத்திலே நின்ற நாணன் “நான் முற்காலத்திலே உம்முடைய பிதாவுடனே வேட்டையாடிக் கொண்டு இம்மலையிலே வந்தபொழுது, ஒரு பிராமணன் இவர்முடியிலே நீரைவார்த்து, இலையையும் பூவையும் சூட்டி உணவை ஊட்டி, சிலவார்த்தைகள் பேசினதைக் கண்டிருக்கின்றேன், இன்றைக்கும் அவனே இப்படிச் செய்தான் போலும்” என்றான். அதைக்கேட்ட திண்ணனார் அந்தச் செய்கைகளே திருக்காளத்தியப்பருக்குப் பிரீதியாகிய செய்கைகளென்று கடைப்பிடித்தார். பின்பு, “ஐயோ! இவருக்கு அமுது செய்தற்கு இறைச்சிகொடுப்பார் ஒருவரும் இல்லை. இவர் அங்கே தனியே இருக்கின்றார். இறைச்சி கொண்டு வரும் பொருட்டு இவரைப் பிரியவோ மனமில்லை. இதற்கு யாதுசெய்வேன்? எப்படியும் இறைச்சிகொண்டு வரவேண்டும்” என்று சொல்லிக்கொண்டு, சுவாமியைப் பிரிந்து சிறிது தூரம் போவார். கன்றைவிட்டுப் பிரிகின்ற தலையீற்றுப் பசுப்போல அவரிடத்திற்குத் திரும்பி வருவார் கட்டி அணைத்துக் கொள்வார்; மீளப்போவார்; சிறிதுதூரம் போய் அத்தியந்த ஆசையோடு சுவாமியைத் திரும்பிப் பார்த்து நிற்பார். “சுவாமீ! நீர் உண்பதற்கு மிருதுவாகிய நல்ல இறைச்சியை நானே குற்றமறத் தெரிந்து கொண்டு வருவேன்” என்பார். “நீர் யாதொரு துணையுமின்றி இங்கே தனியே இருக்கிறபடியால் நான் உம்மைப் பிரியமாட்டேன். உமக்குப் பசி மிகுந்தபடியால் இங்கே நிற்கவுமாட்டேன். ஐயையோ! நான் யாது செய்வேன்” என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் இடைவிடாது பொழிய நிற்பார். பின்பு ஒரு பிரகாரம் போய் வரத்துணிந்து, விலை எடுத்துக்கொண்டு, கையினாலே கும்பிட்டு, சுவாமி சந்நிதானத்தை அருமையாக நீங்கி, மலையினின்றும் இறங்கி நாணன்பின்னே வர, பிறவிஷயங்களிலே உண்டாகும் ஆசை பரமாணுப் பிரமாணமாயினும் இன்றி, அன்புமயமாகி, பொன் முதலியாற்றைக் கடந்து கரை ஏறி, அங்குள்ள சோலையிலே புகுந்தார்.

அதுகண்டு காடன் எதிரேபோய்க் கும்பிட்டு, “நெருப்புக் கடைந்து வைத்திருக்கின்றேன். பன்றியின் அவயவங்களெல்லாவற்றையும் உம்முடைய அடையாளப்படி பார்த்துக்கொள்ளும். திரும்பிப் போதற்கு வெகுநேரம் சென்று போயிற்று. நீர் இவ்வளவு நேரமும் தாழ்த்தது என்னை” என்றான். நாணன் அதைக் கேட்டு “இவர் மலையிலே சுவாமியைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டு மரப்பொந்தைப் பற்றிவிடாத உடும்பைப்போல அவரை நீங்கமாட்டாதவராய் நின்றார். இங்கேயும் அந்தச் சுவாமி உண்ணுதற்கு இறைச்சி கொண்டுபோம்பொருட்டு வந்திருக்கிறார். எங்கள் குலத்தலைமையை விட்டுவிட்டார். அந்தச் சுவாமி வசமாய்விட்டார்’ என்றான். உடனே காடன் “திண்ணரே! நீர் என்ன செய்தீர்? என்ன பைத்தியங்கொண்டீர்” என்று சொல்ல; திண்ணனார் அவன் முகத்தைப் பாராமல், பன்றியை நெருப்பிலே வதக்கி; அதினுடைய இனிய தசைகளை அம்பினாலே வெவ்வேறாகக் கிழித்து அம்பிலே கோத்து நெருப்பிலே காய்ச்சி, பதமாக வெந்தவுடனே, சுவைபார்க்கும்படி அவைகளைத் தம்முடைய வாயிலே இட்டுப் பல்லினாலே மெல்ல மெல்லப் பலமுறை அதுக்கிப் பார்த்து, மிக இனியனவாகிய இறைச்சிகளெல்லாவற்றையும் தேக்கிலையினாலே தைக்கப்பட்ட கல்லையிலே வைத்து, இனியனவல்லாத இறைச்சிகள் எல்லாவற்றையும் புறத்திலே உமிழ்ந்தார். அதைக் கண்ட நாணன் காடன் புறத்திலே உமிழ்ந்தார். அதைக் கண்ட நாணன் காடன் இருவரும், “இவர் மிகப் பைத்தியங் கொண்டிருக்கின்றார். பெறுதற்கரிய இறைச்சியைக் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி வீணாக உமிழுகின்றார். மற்றையிறைச்சியைப் புறத்திலே எறிந்து விடுகின்றார். தாம் மிகப் பசியுடையராயிருந்தும், தனை உண்கின்றாரில்லை. எங்களுக்குத் தருகின்றாருமில்லை. இவர் தெய்வப் பைத்தியங்கொண்டுக்கின்றார். இதனைத் தீர்க்கத்தக்க வழி ஒன்றையும் அறியோம். தேவராட்டியையும் நாகனையும் அழைத்துக் கொண்டுவந்து இதைத் தீர்க்கவேண்டும். வேட்டைக்காட்டிலே நிற்கின்ற ஏவலாளரையும் கொண்டு நாங்கள் போவோம்” என்று நினைத்துக்கொண்டு போனார்கள்.

திண்ணனார் அவ்விருவரும் போனதை அறியாதவராகி, சீக்கிரம் கல்லையிலே மாமிசத்தை வைத்துகொண்டு, திருமஞ்சனமாட்டும்பொருட்டு ஆற்றில் நீரை வாயினால்முகந்து, பூக்களைக்கொய்து தலைமயிரிலே செருகி, ஒருகையிலே வில்லையும் அம்பையும் மற்றக்கையிலே இறைச்சி வைத்த தேக்கிலைக்கல்லையையும் எடுத்துக்கொண்டு, “ஐயோ! என்னுயிர்த் துணையாகிய சுவாமி மிகுந்த பசியினால் இளைத்தாரோ” என்று நினைந்து இரங்கிப் பதைபதைத்து ஏங்கி, தன் குஞ்சுக்கு இரை அருந்துதற்குத் தாழாதோடுகின்ற பறவைபோல மனோகதியும் பின்னிட ஓடிப்போய்க் கடவுளை அடைந்தார். அடைந்து, அவருடைய திருமுடிமேல் இருந்த பூக்களைத் தம்முடைய காற்செருப்பால் மாற்றி, தம்முடைய வாயில் இருக்கின்ற திருமஞ்சனநீரைத் தம்முடைய மனசில் உள்ள அன்பை உமிழ்பவர்போலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தம்முடைய தலையில் இருந்த பூக்களை எடுத்துத் திருமுடியின் மேல் சாத்தி, தேக்கிலையிலே படைத்த இறைச்சியைத் திருமுன்னே வைத்து, “சுவாமீ! கொழுமையாகிய இறைச்சிக ளெலாவற்றையும் தெரிந்து, அம்பினாலே கோத்து நெருப்பிலே பதத்தோடு காய்ச்சிப் பல்லினால் அதுக்கி, நாவினாலே சுவைபார்த்துப் படைத்தேன். இவ்விறைச்சி மிக நன்றாயிருக்கின்றது. எம்பெருமானே! இதை அமுதுசெய்தருளும்” என்று சொல்லி, உண்பித்தார். பின்பு சூரியன் அஸ்தமயமாயிற்று, திண்ணனார் அவ்விரவிலே துஷ்டமிருகங்கள் சுவாமிக்குத் துன்பஞ்செய்தல் கூடுமென்று அஞ்சி, அம்பு தொடுக்கப்பட்ட வில்லைக் கையிலே பிடித்துக்கொண்டும், மறந்தும் கண்ணிமையாமல் சுவாமிக்குப் பக்கத்திலே விழித்துக்கொண்டு நின்றார். அப்படி நின்ற திண்ணனார் வைகறையிலே சுவாமிக்கு இறைச்சி கொண்டுவரும் பொருட்டு, வேட்டையாடுதற்கு மலைச்சாரலுக்குப் போனார். அது நிற்க.

அறிவு அருள் அடக்கம் தவம் சிவபத்தி முதலியவைகளெல்லாம் திரண்டொருவடிவம் எடுத்தாற்போன்றவரும், நல்வினை தீவினைகளால் வரும் ஆக்கக்கேடுகளிலே சமபுத்தி பண்ணுகின்றவரும், யாவரையும் கோகிப்பிக்க வல்லமகா செளந்திரியமுள்ள பெண்கள் வலிய வந்து தம்மைத் தழுவினும் பரமாணுப்பரிமாணமாயினும் சிந்தந்திரியாமல் அவர்களைத் தாயென மதிக்கும் மகாமுனிவரும், திருக்காளத்தியப்பரைத் தினந்தோறும் சைவாகமவிதிப்படி அருச்சிப்பவருமாகிய சிவகோசரியார் என்பவர், பிரமமுகூர்த்தத்திலே எழுந்து போய், பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி, சுவாமியை அருச்சிக்கும் பொருட்டுத் திருமஞ்சனமும் பத்திர புஷ்பமும் எடுத்து, சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு, சுவாமி சந்நிதனத்திலே போனார். போம் பொழுது அங்கே வெந்த இறைச்சியும் எலும்பும் கிடக்கக் கண்டு நடுநடுங்கி, குதித்துப் பக்கத்திலே ஓடினார். ஓடி நின்று, “தேவாதிதேவரே! தேவரீருடைய சந்நிதானத்தை அடைதற்கு அஞ்சாத துஷ்டராகிய வேட்டுவப்புலையர்களே இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும், அவர்கள் இப்படிச் செய்து போதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ” என்று சொல்லி, பதறி அழுது விழுந்து புரண்டார். பின்பு ‘சுவாமிக்கு அருச்சனை செய்யாமல் தாழ்த்தலால் பயன்யாது’ என்று நினைந்து, அங்கே கிடந்த இறைச்சியையும் எலும்பையும் கல்லையையும் திருவலகினால் மாற்றி, சம்புரோக்ஷணஞ்செய்து, மீளப் பொன் முதலியாற்றிலே ஸ்நானஞ் செய்து, திரும்பிவந்து, வேத மந்திரத்தினாலே சுத்திசெய்து, உருத்திரசமா நமகத்தினால் சுவாமிக்கு அபிஷேகம் பண்ணி பத்திரபுஷபங்களால், அருச்சனை செய்தார் செய்து, திருமுன்னே நின்று, இரண்டு கைகளையும் சிரசின்மேலே குவித்து, இரண்டு கண்களினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய திருமேனியெங்கும் மயிர்பொடிப்ப, அக்கினியில் அகப்பட்ட மெழுகுபோல மனம் மிக உருகி இளசு, நாத்தழும்ப, கீத நடையுள்ளதாகிய சாமவேதம் பாடினார். பாடியபின் பலமுறை பிரதக்ஷிணஞ்செய்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, அருமையாக நீங்கிப் போய், தபோவனத்தை அடைந்தார். அது நிற்க.

முன்னே வேட்டையாடுதற்கு மலைச்சாரலிலே சென்ற திண்ணனார் பன்றி மான் கலை மரை கடமை என்னு மிருகங்களைக்கொன்று, அவைகளினிறைச்சியை முன்போலப் பக்குவப்படுத்தி, தேக்கிலையில் வைத்து, கோற்றேனைப் பிழிந்து, அதனோடு கலந்து, முன்போலத் திருமஞ்சனமும் புஷ்பமுங்கொண்டு, மலையிலே ஏறி, சுவாமிசந்நிதானத்தை அடைந்து, முன்போலப் பூசைசெய்து, இறைச்சிக் கல்லையைத் திருமுன்னே வைத்து, “இந்த இறைச்சி முன்கொண்டுவந்தது போலன்று, இவை பன்றி மான் கலை மரை கடமை என்கின்ற மிருகங்களின் இறைச்சி, இவைகளை அடியேனும் சுவைத்துப் பார்த்திருக்கின்றேன். தேனும் கலந்திருகிறது. தித்திக்கும்” என்று சொல்லி, உண்பித்து, அவருக்குப் பக்கத்திலே பிரியாமல் நின்றார். அப்பொழுது முதனாட்போன நாணனும் காடனும் ஆகிய இருவராலும் தன்புத்திரராகிய திண்ணனாருடைய செய்கைகளை அறிந்த நாகன் ஊணும் உறக்கமுமின்றித் தேவராட்டியையுங் கொண்டுவந்து, திண்ணனாரைப் பற்பல திறத்தினாலே வசிக்கவும், அவர் வசமாகாமையைக் கண்டு, சிந்தை நொந்து, “இனியாதுசெய்வோம்” என்று சொல்லிக்கொண்டு; அவரை விட்டுத் திரும்பிப்போய்விட்டார்ன்.

சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு அவ்விறைப்பணியின் வழுவாது நிற்குந் திண்ணனார் பகற்காலத்திலே மிருகங்களைக் கொன்று சுவாமிக்கு இறைச்சியை ஊட்டியும், இராக்காலத்திலே நித்திரை செய்யாமல் சுவாமிக்கு அருகே நின்றும், இப்படித் தொண்டுசெய்து வந்தார். சிவகோசரியாரும் தினந்தோறும் வந்து, சந்நிதானத்திலே இறைச்சி கிடத்தலைக் கண்டு, இரங்கிச் சுத்திசெய்து, சைவாகமவீதிப்படி அருச்சித்துக்கொண்டு, “இந்த அநுசிதம் நிகழாமல் அருளல் வேண்டும்” என்று பிரார்த்தித்து வந்தார். திருக்காளத்தியப்பர் அந்தச் சிவகோசரியாருடைய மனத்துயரத்தை நீக்கும்பொருட்டு ஐந்தாநாள் இராத்திரியில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, “அன்பனே! அவனை வேடுவன் என்று நீ நினையாதே. அவனுடைய செய்கைகளைச் சொல்வோம்.; கேள். அவனுடைய உருவமுழுவதும் நம்மேல் வைக்கப்பட்ட அன்புருவமே. அவனுடைய அறிவுமுழுதும் நம்மை அறியும் அறிவே, அவனுடைய செய்கைகள் எல்லாம் நமக்கு இதமாகிய செய்கைகளே. நம்முடைய முடியின்மேல் உன்னாலே சாத்தப்பட்ட பூக்களை நீக்கும்படி அவன் வைக்கின்ற செருப்படி நம்முடைய குமாரனாகிய சுப்பிரமணியனுடைய காலினும் பார்க்க நமக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகின்றது. அவன் தன் வாயினால் நம்மேல் உமிழுகின்ற ஜலமானது, அன்புமயமாகிய அவனுடைய தேகமென்னும் கொள்கலத்தினின்றும் ஒழுகுகின்ற படியால்; கங்கை முதலாகிய புண்ணிய தீர்த்தங்களைப் பார்க்கினும் நமக்குப் பரிசுத்தமுள்ளதாய் இருக்கின்றது. அவன் தன்னுடைய தலைமயிரிலே செருகிக்கொண்டு வந்து நமக்குச் சாத்துகின்ற புஷ்பங்கள், அவனுடைய மெய்யன்பானது விரிந்து விழுதல்போல விழுதலால், பிரம விஷ்ணு முதலாகிய தேவர்கள் நமக்குச் சாத்தும் புஷ்பங்களும் அவைகளுக்குச் சற்றேனும் சமானமாகாவாம். அவன் நமக்குப் படைக்கின்ற மாமிசம், பதமாக வெந்திருக்கின்றதோ என்று அன்பினால் உருகி இளகிய மனசினோடும் மென்று, சுவைபார்த்துப் படைக்கப் பட்டபடியால், வேதவிதிப்படி யாகம் செய்கின்றவர்கள் தரும் அவியிலும் பார்க்க நமக்கு அதிக மதுரமாயிருக்கின்றது. அவன் நம்முடைய சந்நிதனத்தில் நின்று சொல்லும் சொற்கள், நிஷ்களங்கமாகிய அன்பினோடும் நம்மையன்றி மற்றொருவரையும் அறியாது வெளிப்படுதலால், வேதங்களும் மகாமுனிவர்கள் மகிழ்ந்து செய்கின்ற ஸ்தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றிலும் பார்க்க நமக்கு மிக இனியனவாயிருக்கின்றன. அவனுடைய அன்பினால் ஆகிய செய்கைகளை உனக்குக் காட்டுவோம். நீ நாளைக்கு நமக்குப் பிற்பக்கத்திலே ஒளிந்திருந்து பார்” என்று சொல்லி மறைந்தருளினார். சிவகோசரியார் சொப்பனாவத்தையை நீங்கிச் சாக்கிராவத்தையை யடைந்து, பரமசிவன் தமக்கு அருளிச்செய்த திருவார்த்தகளை நினைந்து நினைந்து, “அறியாமையே நிறைந்துள்ள இழிவாகிய வேடுவர் குலத்திலே பிறந்த அவருக்கு வேதாகமாதி சாஸ்திரங்களிலே மகாபாண்டித்தியமுடைய மகாமுனிவர்கள் தேவர்களிடத்திலும் காணப்படாத உயர்வொப்பில்லாத இவ்வளவு பேரன்பு வந்தது, ஐயையோ! எவ்வளவு அருமை அருமை” என்று ஆச்சரியமும், “இப்படிப்பட்ட பேரன்பர் செய்த அன்பின் செய்கைகளைப் புழுத்தநாயினும் கடையனாகிய பாவியேன் அநுசிதம் என்று நினைந்தேனே! ஐயையோ? இது என்ன கொடுமை” என்று அச்சமும் அடைந்து, வைகறையிலே போய்ப் பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி மலையில் ஏறி, முன்போலச் சுவாமியை அருச்சித்து, அவருக்குப் பிற்பக்கத்திலே ஒளித்திருந்தார்.

சிவகோசரியார் வருதற்கு முன்னே வேட்டையாடுதற்குச் சென்ற திண்ணனார் வேட்டையாடி, இறைச்சியும் திருமஞ்சனமும் புஷ்பமும் முன்போல அமைத்துக்கொண்டு அதிசீக்கிரந் திரும்பினார். திரும்பி வரும்பொழுது, பலபல துர்ச்சகுனங்களைக்கண்டு, “இந்தச்சகுனங்களெல்லாம் உதிரங் காட்டுகின்றன. ஆ கெட்டேன்! என்கண்மணிபோன்ற சுவாமிக்கு என்ன அபாயம் சம்பவித்ததோ! அறியேனே” என்று மனங்கலங்கி, அதிசீக்கிரம் நடந்தார். அடியார்களுடைய பத்தி வலையில் அகப்படுகின்ற அருட்கடலாகிய பரமசிவன் திண்ணனாருடைய அன்பு முழுதையும் சிவகோசரியாருக்குக் காட்டும் பொருட்டுத் திருவுளங்கொண்டு, தம்முடைய வலக்கண்ணினின்றும் இரத்தம் சொரியப்பண்ணினார். திண்ணனார் தூரத்திலே கண்டு விரைந்தோடி வந்தார் வந்தவுடனே, இரத்தஞ் சொரிதலைக் கண்டார். காண்டலும், வாயிலுள்ள திருமஞ்சனம் சிந்த, கையில் இருந்த இறைச்சி சிதற, அம்பும் வில்லும் விழ, தலைமயிரிலே செருகப்பட்ட புஷ்பங்கள் அலைந்து சோர, ஆட்டுகின்ற கயிறு அற்றபொழுது வீழ்கின்ற நாடகப் பாவைபோலச் சீக்கிரம் பதைபதைத்து நிலத்திலே விழுந்தார். விழுந்தவர் எழுந்து போய், இரத்தத்தைப் பலமுறை கையினாலே துடைக்க; அது காலுதல் தவிராமையைக் கண்டு, அதற்கு இன்னது செய்வோம் என்று அறியாதவராகி, பெருமூச்செறிந்து, திரும்பிப்போய் விழுந்தார். நெடும்பொழுது உள்ளுயிர்த்தமின்றி இறந்தவர்கள் போலக்கிடந்தார், பின் ஒருவாறு தெளிந்து, “இப்படிச் செய்தவர்கள் யாவர்” என்று சொல்லிக்கொண்டு எழுந்தார். எங்கும் பார்த்தார், வில்லையெடுத்து அம்புகளைத் தெரிந்துகொண்டு “என்னுடைய சுவாமிக்கு இத்தீங்கு வந்தது எனக்குப் பகைவர்களாகிய வேடுவர்களாலோ இந்தவனத்திற் சஞ்சரிக்கின்ற துஷ்ட மிருகங்களாலோ! யாதென்று தெரியவில்லையே” என்று சொல்லி, மலைப்பக்கங்களிலே நெடுந்தூரமட்டும் தேடிப் போனார். வேடர்களையேனும் விலங்குகளையேனும் காணாதவராகி, திரும்பிவந்து, குறைவில்லாத துன்பத்தினாலே மனம் விழுங்கப்பட்டு, சுவாமியைக் கட்டிக்கொண்டு, இடியேறுண்ட சிங்கேறுபோல வாய்விட்டுக் கண்ணீர்சொரிய அழுதார். “என்னுயிரினும் சிறந்தவரும் அடைந்தவர்கள் அன்பினாலே ப்ரியமாட்டாதவரும் ஆகிய சுவாமிக்கு எப்படி இந்தத் துன்பம் சம்பவித்ததோ! இதைத் தீர்ப்பதற்கு மருந்தொன்றை அறியேனே! ஐயையோ! இதற்கு என்ன செய்வேன்” என்றார். இந்த உதிரம் என்னசெய்தால் நிற்குமோ? இந்தத் தீங்கைச் செய்தவர்களைக் காணேன். வேடர்கள் அம்பினாலாகிய புண்ணைத் தீர்க்கின்ற பச்சிலைமருந்துகளை மலையடிவாரத்திலே பிடுங்கிக்கொண்டு வருவேன்” என்று சொல்லிக்கொண்டு போனார். தன்னினத்தைப் பிரிந்துவந்த இடபம்போலச் சுவாமியைப் பிரிந்து வந்ததினால் வெருட் கொண்டு வனங்களெங்குந் திரிந்து, பல்வகையாகிய பச்சிலைகளைப் பிடுங்கிக் கொண்டு, சுவாமிமேல் வைத்த மனசிலும் பார்க்க விரைந்து வந்து, அம்மருந்துகளைப் பிழிந்து அவர் கண்ணிலே வார்த்தார். அதினால், அக்கண்ணிவிரத்தம் தடைப்படாமையைக் கண்டு, ஆவிசோர்ந்து, “இனி நானிதற்கு என்ன செய்வேன்” என்று ஆலோசித்துக் கொண்டு நின்றார். நிற்க. “ஊனுக்கு ஊனிடம் வேண்டும்” என்னும் பழமொழி அவருடைய ஆத்தியானத்திலே வந்தது. உடனே, “இனி என்னுடைய கண்ணை அம்பினாலே இடந்து அப்பினால் சுவாமியுடைய கண்ணினின்றும் பாயும் இரத்தம் தடைப்படும்” என்று நிச்சயித்துக்கொண்டு, மன மகிழ்ச்சியோடும் திருமுன்னே இருந்து, அம்பையெடுத்துத் தம்முடைய கண்ணணத்தோண்டிச் சுவாமியுடைய கண்ணிலே அப்பினார். அப்பினமாத்திரத்திலே இரத்தம் தடைப்பட்டதைக் கண்டார். உடனே அடங்குதற்கரிய சந்தோஷமாகிய கடலிலே அமிழ்ந்திக் குதித்துப் பாய்ந்தார். மலைபோலப் பருத்த புயங்களிலே கைகளினாலே கொட்டி ஆரவாரித்தார் கூத்தாடினார். “நான் செய்த செய்கை நன்று நன்று” என்று சொல்லி வியந்து, அத்தியந்த ஆனந்தத்தினாலே உன்மத்தர் போலாயினார். இப்படிச் சந்தோஷசாகரத்திலே உலாவும் பொழுது, திருக்காளத்தியீசுரர் அந்தத் திண்ணனாருடைய பேரன்பைச் சிவகோசரியாருக்குப் பின்னுங் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு, தம்முடைய மற்றையிடக்கண்ணிலும் இரத்தஞ்சொரியப்பண்ணினார். அது திண்ணனாருடைய அளவில்லாத சந்தோஷசாகரத்தை உறிஞ்சியது. அக்கினி நிரயத்துள்ளே விழுந்து நெடுங்காலம் துன்பமுற்று அதனை நீங்கிச் சுவர்க்கத்தை அடைந்து இன்பமுற்றோனொருவன் பின்னும் அந்நிரயத்திலே வீழ்ந்தாற் போல, திண்ணவார் உவகைமாறி, கரையில்லாத துன்பக் கடலிலே அழுந்தி ஏங்கி, பின்னர் ஒருவாறு தெளிந்து, “இதற்கு நான் அஞ்சேன், மருந்து கைகண்டு கொண்டேன் இன்னும் ஒருகண்ணிருக்கின்றதே! அதைத்தோண்டி அப்பி இந்நோயைத் தீர்ப்பேன்” என்று துணிந்து. தம்முடைய கண்ணைத் தோண்டியபொழுது சுவாமியுடைய கண் இவ்விடத்திலிருக்கின்றது என்று தெரியும் பொருட்டு, ஒரு செருப்புக்காலை அவர் கண்ணின் அருகிலே ஊன்றிக் கொண்டு, பின்னே மனசிலே பூர்த்தியாகிய விருப்பத்தோடும் தம்முடைய கண்ணைத்தோண்டும்படி அம்பைவைத்தார். தயாநிதியாகிய கடவுள் அதைச் சகிக்கலாற்றாதவராகி, வேதாகமங்கள் தோன்றிய தம்முடைய அருமைத் திருவாய் மலரைத் திறந்து, “நில்லு கண்ணப்ப நில்லு! கண்ணப்ப! என்னன் புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப! என்று அருளிச் செய்து, அவருடைய கண்ணைத் தோண்டும் கையைத் தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத்திற்றோன்றிய திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டார். உடனே பிரமாதி தேவர்கள் சமஸ்தரும் வேதகோஷத்தோடும் நிலம் புதையக் கற்பகப் பூமாரி பெய்தார்கள். மகாஞானியாகிய சிவகோசரியார் இந்தச் சமாசாரம் முழுதையும் கண்டு, அத்தியந்த ஆச்சரியமடைந்து, சுவாமியை வணங்கினார். அற்றைநாள் முதலாகப் பெரியோர்கள் சுவாமி சொல்லிய படியே அவருக்குக் கண்ணப்பர் என்னும் பெயரையே வழங்குகிறார்கள். நெடுங்காலமாக உஷ்ணமாகிய அக்கினி மத்தியில் நின்று ஐம்புலன் வழியே செல்லாதபடி மனசை ஒடுக்கி அருந்தவஞ் செய்கின்றவர்களுக்கும் கிட்டாத பரம்பொருளாகிய கடவுள் ஆறுநாளுக்குள்ளே பெருகிய அன்பு மேலீட்டினாலே, தம்முடைய திருநயனத்தில் இரத்தத்தைக் கண்டு அஞ்சித் தம்முடைய கண்ணை இடந்து அத்திருநயனத்தில் அப்புந் திண்ணனாருடைய கையைத் தமது அருமைத் திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டு, “நிஷ்களங்க பத்தியையுடைய கண்ணப்பா, நீ நமக்கு வலப்பக்கத்திலே நில்” என்று திருவருள் புரிந்தார். இதைப் பார்க்கிலும் பெற வேண்டிய பெரும்பேறு யாது?

Advertisements

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: