சிவாலய தரிசன விதி


அநாதி முத்த சித்துருவாகிய முதற்கடவுள் சிவபெருமானே என்று துணிந்து, அவர் அருளிச் செய்த வேதாமகங்களிலே விதித்தபடி, தங்கள் தங்கள் வருணத்துக்கும் ஆச்சிரமத்துக்கும் ஏற்ப அவரை மெய்யன்போடு வழிபடுவோர் சைவசமயிகள் என்று சொல்லப்படுவர்.

கருணாநிதியான சிவபெருமான், புறத்தே திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனியும் தமது மெய்யடியாருடைய திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளோர் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.

சிவத்திரவியங் கவராமை, கொல்லாமை, புலாலுண்ணாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, பிறர்மனை நயவாமை, வரைவின்மகளிர் நயவாமை, இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய் தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகள் இவ் வழிபாட்டுக்கு அங்கங்களாம்; இவ்வழிபாடு அங்கியாம். ஆதலா, இந்நன்மைகள் இல்லாது செய்யும் வழிபாடு சிறிதும் பயன்படாதென்பது துணிபு.

இவ்வழிபாடு செய்யும் சைவசமயிகளே தரிக்கற்பாலனவாகிய சிவசின்னங்கள் விபூதியும் உருத்திராக்ஷமுமாம். இவைகளைத் தரியாது செய்யும் சிவ புண்ணியங்கள் சிறிதும் பயன்படாவாம்.

திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் பரார்த்தலிங்கம் எனப் பெயர்பெறும். அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்புலிங்கம் தானே தோன்றியது. காணலிங்கம் விநாயகர் சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவிகலிங்கம் விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிடலிங்கம் இருடிகளாலே தாபிக்கப்பட்டது. அசுரர் இராக்சதர்களாலே தாபிக்கப்பட்டதும் அது. மானுடலிங்கம் மனுடராலே தாபிக்கப்பட்டது. மானுடலிங்கத்தின் உயர்ந்தது ஆரிடலிங்கம்; அதனின் உயர்ந்தது தைவிகலிங்கம்; அதனின் உயர்ந்தது காணலிங்கம்; அதனின் உயர்ந்தது சுயம்புலிங்கம்.

திருக்கோயொலிலே கர்ப்பக்கிருகத்தினுள்ளே சிவலிங்கப்பெருமானைச் சூழ்ந்தவிடம் முதலாவரணம். அதற்கப்பாலுள்ளது இரண்டாமாவரணம். அதற்கப்பாலுள்ளது மூன்றாமாவரணம். அதற்கப்பாலுள்ளது நான்காமாவரணம். அதற்கப்பாலுள்ளது ஐந்தாமாவரணம். அதற்கப்பால் ஊரின்புறம் ஆறாமாவரணம். பிரதக்ஷிணபலம் முதலாவரணத்தினும் பார்க்க இரண்டாமாவரணத்தும், இரண்டாமாவரணத்தினும் பார்க்க மூன்றாமாவரணத்தும், மூன்றாமாவரணத்தினும் பார்க்க நான்காமாவரணத்தும், நான்காமாவரணத்தினும் பார்க்க ஐந்தாமாவரணத்தும், ஐந்தாமாவணத்தினும் பார்க்க ஆறாமாவரணத்தும் அதிகமாம்.

படைப்புக்காலத்திலே சதாசிவமூர்த்தியுடைய ஐந்து முகங்களினின்றும் தோன்றிய காசிபர் முதலிய ஐந்திருடிகளுடைய கோத்திரத்திலே பிறந்த ஆதிசைவராகிய சிவப்பிராமணர்களுள், மனக்குற்றங்களும் உடற்குற்றங்களும் இல்லாதவர்களாய், சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றவர்களாய், வேதாமகங்களை ஓதியுணர்ந்தவர்களாய், நித்தியம், நித்தியாங்கம், நைமித்திகம், நைமித்திகாங்கம், காமியம், காமியாங்கம் என்னும் ஆறு கருமங்களையும் மந்திரம், பாவனை, கிரியை என்னும் மூன்றும் வழுவாவண்ணம் சிரத்தையோடு விதிப்படி செய்ய வல்லவர்களாய் உள்ள சிவாசாரியர்களே பரார்த்தலிங்கபூசை செய்தற்கு அதிகாரிகள். இவர்களல்லாத பிறர் பரார்த்தலிங்கத்தைத் தீண்டினும், அரசனுக்கும் உலகத்துக்கும் கேடுவிளையும்.

பூசகராகிய சிவாசாரியார், கிழக்குநோக்கிய சந்நிதியிலும் தெற்குநோக்கிய சந்நிதியிலும் வலப்பக்கத்தும், மேற்குநோக்கிய சந்நிதியிலும் வடக்குநோக்கிய சந்நிதியிலும் இடப்பக்கத்தும் நின்று பூசை செய்ய வேண்டும்.

மனக்குற்றங்களும் உடற்குற்றங்களும் இல்லாதவர்களாய், சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை என்னும் மூன்றும் பெற்றவர்களாய், சைவாகமங்களையும் சிவபுராணங்களையும் கற்றறிந்தவர்களாய் சிவபத்திமான்களாய் உள்ள சைவர்களே திருக்கோயிலை நடாத்துதற்கு அதிகாரிகளாவர். இம்மைப்பயனாகிய திரவிய முதலியவற்றைக் குறியாது, திருக்கோயிலைச் சிரத்தையோடு விதிப்படி நடாத்துவோர் இம்மையிலே சிவகீர்த்தியைப் பெற்றுப் பின்பு சிவபதத்தை அடைவர். இம்மைப்பயனைக் குறித்து அதிகாரங்களைப் பண்ணிச் சிவத்திரவியங்களைத் திருடுவோரும், முந்தின படித்தரங்களைக் குறைத்தவரும் தண்டிக்கப்படுவர்.

திருக்கோயிலிலே காலந்தோறும் பூசை முதலியவை தவறாமல் விதிப்படி செய்யப்படல் வேண்டும். தவறினால், இராசாவுக்கும் உலகத்தாருக்கும் தீங்குவிளையும்.

சைவசமயிகள் நாடோறும் திருக்கோயிலிற்சென்று, சிரத்தையோடு விதிப்படி சிவதரிசனஞ் செய்து கொண்டு, வீட்டுக்குத் திரும்பல் வேண்டும்.

சிவதரிசனஞ் செய்ய விரும்புவோர் சிவாலயத்துக்குச் சமீபத்தில் உள்ள சிவதீர்த்தத்திலே விதிப்படி ஸ்நானஞ்செய்து, கரையிலேறி, சரீரத்துள்ள ஈரத்தை உலர்ந்த வஸ்திரத்தினாலே துவட்டி, நெற்றியில் வீபூதி தரித்து, குடுமியை முடித்து, ஈரக்கௌபீனத்தைக் களைந்து, உலர்ந்தகௌபீனந்தரித்து, கைகளிரண்டையுஞ் சுத்திசெய்து, தோய்த்துலர்ந்தனவாய்க் கிழியாதனவாய் வெள்ளியனவாய் உள்ள சுத்த வஸ்திரம் இரண்டு அரையிலே தரித்து, அனுட்டானமும் செபமும் முடித்துக் கொண்டு, திருக்கோயிலுக்குப் போகக்கடவர். ஸ்நானம் முதலிய நியமங்கள் இல்லாது திருக்கோயிலுக்குப் போவோர் சிவநிந்தகரை ஒப்பர்.

திருக்கோயிலுக்குப் போகும்பொழுது, ஒருபாத்திரத்திலே தேங்காய் பழம் பாக்கு வெற்றிலை முதலியவை வைத்து, அரைக்குக் கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக்கொண்டு, திருக்கோயிலுக்குப் போகக்கடவர். சிவபெருமானையும் சிவாக்கினியையும் ஆசாரியரையும் சேவிக்கப்போகுமிடத்து, வெறுங்கையுடனே போகாது, தம்மாலே கொடுத்தற்கியன்ற பதார்த்தத்தை அவர் சந்நிதியிலே வைத்து, வணங்குதலே தகுதி. பொருளில்லாதவன் பத்திரபுட்பங்கள் கொடுத்து வணங்கல் வேண்டும். அதுவுங் கூடாதவன் சந்நிதியில் உள்ள செத்தை முதலியவற்றைப் போக்கி வணங்கல் வேண்டும்.

திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே தூலலிங்கமாகிய கோபுரத்தை வணங்கி, இரண்டுகைகளையும் சிரசிலே குவித்துக் கொண்டு உள்ளே பிரவேசித்து, பத்திரலிங்கமாகிய பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணக்கடவர்.

ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் பண்ணல்வேண்டும். திரயாங்க நமஸ்காரம் இவ்விருவருக்கும் பொது.

அட்டாங்க நமஸ்காரமாவது: தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டு உறுப்பும் நிலத்திலே தோயும்படி வணங்குதல். பஞ்சாங்க நமஸ்காரமாவது: தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்துறுப்பும் நிலத்திலே தோயும்படி வணங்குதல். திரயாங்க நஸ்காரமாவது: சிரசிலே இரண்டு கைகளையும் குவித்தல்.

நம்ஸ்காரம், மூன்றுதரமாயினும், ஐந்துதரமாயினும், ஏழுதரமாயினும், ஒன்பதுதரமாயினும், பன்னிரண்டுதரமாயினும் பண்ணல்வேண்டும். ஒருதரம் இருதரம் பண்ணுதல் குற்றம்.

நமஸ்காரம் பண்ணுமிடத்து, மேற்கேயாயினும் தெற்கேயாயினும் கால் நீட்டல் வேண்டும்; கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் கால் நீட்டலாகாது.

கிழக்குநோக்கிய சந்நிதியிலே பலிபீடத்துக்கு அக்கினிமூலையினும், தெற்குநோக்கிய சந்நிதியிலும் மேற்குநோக்கிய சந்நிதியிலும் பலிபீடத்துக்கு நிருதிமூலையினும், வடக்குநோக்கிய சந்நிதியிலே பலிபீடத்துக்கு வாயுமூலையினும் சிரசைவைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டி, பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந்தச்செய்து நமஸ்காரம் பண்ணக்கடவர்.

பின்பகலிலே சூரியகிரகணமாயினும் சங்கிராந்தியாயினும் வரின், அப்பொழுது தரிசனஞ் செய்யப்போனவர், மேற்கே கால் நீட்டலாகாமையால், தெற்குநோக்கிய சந்நிதியிலும் வடக்குநோக்கிய சந்நிதியிலும் அட்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணாது, திரயாங்க நமஸ்காரம் மாத்திரம் பண்ணல் வேண்டும்.

மேற்சொல்லியபடி நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு, சிவபெருமானைச் சிறிதும் மறவாத சிந்தையோடு செபமாலையைக் கையில் வைத்துப் பஞ்சாக்ஷாசெபம் செய்து கொண்டாயினும், இரண்டுகைகளையும் இருதயத்திலே குவித்துக் கொண்டாயினும், பூரண கர்ப்பிணியானவள் காலிலே விலங்கு பூட்டப்பட்டவளாய் எண்ணெய் நிறைந்த குடத்தைச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு நடத்தல்போல, செந்துக்கள் வருந்துமேயென்று மனம் உருகிப் பூமியைப் பார்த்துக் கொண்டு கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷிணம் பண்ணக்கடவர்.

சிவபெருமானை மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பதினைந்து தரமாயினும், இருபத்தொரு தரமாயினும் பிரதிக்ஷணம் பண்ணல் வேண்டும்.

விநாயகரை ஒருதரமும், சூரியனை இரண்டுதரமும், பார்வதிதேவியாரையும் விட்டுணுவையும் நந்நான்கு தரமும் பிரதக்ஷிணம் பண்ணல்வேண்டும்.

பிரதிக்ஷணம் பண்ணும் ஆவரணத்திலே தூபிநிழலேனும் துசத்தம்பநிழலேனும் இருப்பின், அந்நிழலில் மூன்றுகூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூற்றினுள்ளே செல்லக்கடவர். கடவுள் உற்சவங் கொண்டருளும் காலத்திலே உடன்செல்லும் பொழுது அந்நிழலிருப்பினும் நீக்காது செல்லலாம்.

அபிஷேககாலத்தில் உட்பிரகாரத்திலே பிரதிக்ஷணம், நமஸ்காரம் முதலானவை பண்ணலாகாது.

பிரமசாரிகள் வலம்வரக் கடவர். கிருகத்தரும் வானப்பிரத்தரும் வலமும் இடமுமாக வரக்கடவர். சந்நியாசிகள் இடம்வரக்கடவர். வலஞ்செய்தலினாலே போகமும், இடஞ்செய்தலினாலே மோக்ஷமும், வலமும் இடமும் செய்தலினாலே போகமோக்ஷமும் உண்டாகும்.

வலமும் இடமுஞ் செய்தல் கர்ப்பக்கிருகத்தில் என்று கயாம்புவத்திலே சொல்லப்பட்டது. கர்ப்பக்கிருகத்துப் பிரதிக்ஷணம் பூசகராகிய சிவப்பிராமணருக்கு மாத்திரம் விதிக்கப்பட்டது. கர்ப்பக்கிருகத்திலே சிவலிங்கச்சாயையையும் நிருமாலியத்தையும் சோமசூத்திரத்தையும் க்டவாது வலமிடஞ்செய்தல் வேண்டும். கர்ப்பக்கிருகத்தில் வலமிடமும், வெளிப்பிரகாரங்களில் வலமும் செய்தல் வேண்டுமென்று காலோத்தரத்தில் விதிக்கப்பட்டது.

தாம் பிரதிக்ஷணம் பண்ணும் ஆவரணத்தில் உள்ள பலிபீடத்தையும் இடபத்தையும் சேர்த்துப் பிரதிக்ஷணம் பண்ணக்கடவர். தாம் பிரதிக்ஷணம் பண்ணும் ஆவரணத்திலே பலிபீடமும் இடபமும் இல்லையாயின் அதற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள பலிபீடத்தையும் இடபத்தையும் சேர்த்துப் பிரதிக்ஷணம் பண்ணக்கடவர். சிவலிங்கத்துக்கும் அந்த அந்த ஆவரணத்தில் உள்ள பலிபீட இடபங்களுக்கும் இடையே போகலாகாது. இப்படிக் காலோத்தராகமத்திலே சொல்லப்பட்டது.

மேற்சொல்லியபடி பிரதிக்ஷணம் பண்ணிச் சந்நிதானத்திலே நமஸ்காரம் செய்து எழுந்து கும்பிட்டு, துவாரபாலகரை வணங்கி, பின்பு கணநாயராகிய திருநந்திதேவரை வணங்கித் துதித்து, “பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்த அடியேன் உள்ளே புகுந்து சிவபெருமானைத் தரிசித்துப் பயன்பெறும்பொருட்டு அனுமதி செய்தருளும்” என்று பிரார்த்தித்துக்கொண்டு உள்ளே போகக்கடவர்.

முன்னே விக்கினேசரருடைய சந்நிதியையடைந்து, இருகைகளையும் குவித்து அவரைத் தரிசித்து மனசிலே தியானித்து, முட்டியாகப்பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மும்முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும் இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு மும்முறை தாழ்ந்தெழுந்து, தோத்திரம் பண்ணக்கடவர்.

பின்பு இருகைகளையுஞ் சிரசிலே குவித்துக்கொண்டு சிவபெருமானுடைய சந்நிதியை அடைந்து, அவரைத் தரிசித்து மனசிலே தியானித்து, சிரசிலும் இருதயத்திலும் அஞ்சலிசெய்து, மனங் கசிந்துருக உரோமஞ் சிலிர்ப்ப, ஆனந்த அருவி சொரிய, முப்பத்திரண்டு இராகங்களுள் அவ்வக்காலத்துக்கு ஏற்ற இராகத்துடனே தோத்திரங்களைச் சொல்லக்கடவர்.

உத்தமோத்தமமாகிய தோத்திரங்கள்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பலாண்டு, பெரிய புராணம் என்னும் ஐந்துமாம்.

சிவபெருமானைப் பூசகரைக்கொண்டு வில்வத்தினாலே அருச்சனை செய்வித்து, விதிப்படி சுத்திசெய்யப்பட்ட பழம் முதலியவற்றை நிவேதிப்பித்து, கர்ப்பூராராத்திரிகம் பணிமாறப்பண்ணி, பூசகருக்கு இயன்ற தக்ஷிணை கொடுக்கக்கடவர்.

சிவப்பிராமணர்கள் கர்ப்பக்கிருகத்திலும், பிராமணர்கள் அர்த்தமண்டபத்திலும், ஷத்திரியர் மகாமண்டபத்திலும் புகுந்து சிவமூலமந்திரத்தினாலே புஷ்பாஞ்சலி செய்யக்கடவர். வைசியர் இடபத்துக்கு முன்னும், சூத்திரர் இடபத்துக்குப் பின்னும் கோமயத்தினாலே சதுரச்சிரமாக இடம்பண்ணி, சிவமூலமந்திரத்தினால் அருச்சிக்கக்கடவர். இப்படி அஞ்சுமான் என்னும் ஆகமத்திலே சொல்லப்பட்டது.

பின்பு சபாபதி, தக்ஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையும் சமயாசாரிகள் நால்வரையும் தரிசித்து வணங்கித் துதிக்கக்கடவர்.

அதன்பின் பார்வதிதேவியாருடைய சந்நிதியை அடைந்து, சிரசிலும் இருதயத்திலும் அஞ்சலி செய்து, அவரைத் தரிச்சித்து மனசிலே தியானித்து, அருச்சனை முதலியன செய்வித்து, தோத்திரங்களைச் சொல்லக்கடவர்.

இறுதியில் வீபுதிவாங்கித் தரித்துக்கொண்டு, பிரதிக்ஷணஞ்செய்து சண்டேசுரர் சந்நிதியை அடைந்து வணங்கித் தோத்திரஞ்செய்து, தாளத்திரயம் பண்ணிச் சிவதரிசனபலத்தைத் தரும்பொருட்டுப் பிரார்த்திக்கக் கடவர்.

அதன்பின் நந்திதேவரை அடைந்து வணங்கித் துதித்து, பலிபீடத்துக்கு இப்பால் வந்து மும்முறை நமஸ்கரித்து, எழுந்து வடக்கு நோக்கி இருந்து சிவபெருமானைத் தியானித்துக்கொண்டு, பஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச் செபித்து, எழுந்து வீட்டுக்குப் போகக்கடவர்.

தரிசனஞ்செய்து திரும்பும் பொழுது, சிவபெருமானுக்கும் இடபதேவருக்கும் புறங்காட்டாது, திரும்பல் வேண்டும்.

சிவதரிசனம் பிராதக்காலத்திலே செய்தால் இரவிலே செய்த பாவம் போம்; மத்தியான்னத்திலே செய்தால் பிறந்த நாட்டொடங்கிச் செய்த பாவம் போம்; சாயங்காலத்திலே சய்தால் ஏழுபிறவிகளிற் செய்த பாவம் போம். ஆதலால், சைவசமயிகள் யாவரும் எந்நாளும் காலந்தோறும் தவறாமல் விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யக்கடவர்.

சோமவாரம், அட்டமி, பிரதோஷம், பௌர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரைவிஷு, மாசப்பிறப்பு, சூரியகிராணம், சந்திரகிராணம், சிவராத்திரி முதலிய புண்ணியகாலங்களிலே சிவதரிசனஞ் செய்தல் மிக மேலாகிய சிவபுண்ணியம்.

சிவபெருமானை மனசினாலே தியானித்துக் கொண்டும் பஞ்சாக்ஷரத்தை வாக்கினாலே உச்சரித்துக் கொண்டும் சூரியோதயந் தொடங்கி அத்தமயபரிபந்தமாயினும் ஒருயாமமாயினும் அங்கப்பிரதக்ஷிணஞ் செய்தவர் தீவினைகளெல்லாவற்றினின்றும் நீங்கி முத்தியை அடைவர்.

இடபதேவரைத் தரிசித்து, அங்குநின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, சென்ற வழியே திரும்பிவந்து மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்குநின்றும் வலமாகச் சென்று வடதிசையைச் சேர்ந்து கோமுகையைக் கடவாது முன்சென்ற வழியே திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, அங்குநின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்குநின்றும் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது வலமாகச் சென்று வடதிசையைச் சேர்ந்து, அங்குநின்றும் திரும்பிவந்து இடபதேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, பின்பு சிவலிங்கப்பெருமானைத் தரிசித்து வணங்குதல் சோமசூத்திரப் பிரதிக்ஷணம் எனப் பெயர்பெறும். பிரிந்துவரும் பொழுது ஆன்மப்பிரதக்ஷிணம் பண்ணல்வேண்டும். இப்படி ஒரு பிரதிக்ஷிணஞ் செய்யின், அநந்தமடங்கு பயனுண்டு. இந்தப் பிரதிக்ஷிணம் பிரதோஷ காலத்திலே செய்யின் மிக விசேடமாம்.

சுக்கிலபக்ஷம் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டு பக்ஷத்தும் வருகின்ற திரயோதசித் திதியிலே சூரியாஸ்தமனத்துக்குமுன் மூன்றேமுக்கால் நாழிகையும் பின் மூன்றேமுக்கால் நாழிகையுமாயுள்ள காலமே பிரதோஷம் எனப்படும். விட்டுணு முதலிய தேவர்கள் தாங்கள் திருப்பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷம் தோன்றக் கண்டு அஞ்சி ஓட்டெடுப்ப, அது அவர்களை வலமும் இடமுமாக மறித்துத் தொடர்ந்தது. அவர்கள் திருக்கைலாயத்திற் சென்று, இடபதேவருடைய அண்டத்தில் ஒளித்தார்கள். அவர்களை ஆலாகலவிஷம் பின்றொடர்ந்து வரும்போது சிவபெருமான் இடபதேவருடைய இரண்டு கொம்பினடுவே இருந்து அவ்விஷத்தைத் திருக்கரத்திலேற்று உட்கொண்டு, அவர்களைக் காத்து, அக்கொம்பினடுவே நின்று நிருத்தஞ் செய்தருளினார். இது சனிவாரத்திலே திரயோதசித் திதியிலே சாயங்காலத்திலே அர்த்தமணடசமயத்திலே நிகழ்ந்தது. ஆதலால் சனிப்பிரதோஷம் மிகச்சிறந்தது. இப் பிரதோஷ வரலாறு வேறொரு பிரகாரமாகவுஞ் சொல்லப்படும். ஏகாதசியின் மாலைக்காலத்திலே சிவபெருமான் ஆலாகலவிஷத்தை உண்டு தேவர்களைக் காத்தருளினார். துவாதசியிலே அமைர்தந்தோன்ற, தேவர்கள் அதை உண்டு, திரயோதசியின் மாலைக்காலத்திலே சிவபெருமானைப் பூசித்து வணங்கினார்கள். அப்பொழுது சிவபெருமான் இடபத்தின்மேனின்று அருள் செய்தார். இப்பிரதோஷத்திலே இடபதேவருடைய அண்டத்தைப் பரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடுகூட ஹர ஹர என்று சொல்லி, சிவலிங்கப் பெருமானைத் தரிசித்தல் வேண்டும்.

பிரதோஷ காலத்திலே மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும், முத்தி சித்திக்கும்.

திருக்கோயிலிலே செய்யத்தகும் சிவபுண்ணியங்களாவன: நாடோறும் சூரியன் உதிக்குமுன் எழுந்து ஸ்நானஞ் செய்து அனுட்டானம் முடித்துக்கொண்டு வந்து மெல்லிய மார்ச்சனியினாலே கிருமிகள் சாவாமல் மேற்படத் திருவலகிடுதலும், ஈன்றண்ணியதும் நோயினதுமல்லாத பசுவினது சாணியைப் பூமியில் விழுமுன் இலையில் ஏற்றாயினும், அது கூடாதாயிற் சுத்தநிலத்தில் விழுந்த சாணியை மேல் கீழ் தள்ளி நடுப்பட எடுத்தாயினும், வாவி நதி முதலியவற்றில் வடித்தெடுத்துக் கொண்டுவந்த நீரோடு கூட்டித் திருமெழுக்குச் சாத்தலும், திருநந்தவனத்திலே விதிப்படி பூக்களைக் கொய்து பழுது நீக்கித் திருமாலைகட்டிச் சிவபெருமானுக்குச் சாத்துவித்தலும், சிவசந்நிதியிலே தமிழ்வேதத்தைப் பண்ணோடு பாடுதலும், அதனைச் சாரங்கியில் ஏற்றி வாசித்தலும், சிவதோத்திரங்களைச் சொல்லிக் கைகொட்டி ஆனந்தக் கூத்தாடுதலும், சுகந்த தூபம் இடுதலும், திருவிளக்கேற்றுதலும், சிவபுராணங்களை வாசித்துப் பொருள் சொல்லுதலும், அதனைக் கேட்டலும், பிரகாரங்களில் உள்ள புல்லைச் செதுக்குதலும், தங்கள் தங்கள் செல்வத்துக்கு ஏற்பத் திருப்பணியும் பூசையுஞ் செய்வித்தலும், பிறவுமாம்.

திருக்கோயிலிற் செய்யலாகாத குற்றங்களாவன: ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், சனனாசௌச மரணாசௌசத்தோடு போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், அபானவாயு விடுதல், பாக்குவெற்றிலை உண்டல், தம்பல முமிழ்தல், சோசனபானம் பண்ணுதல், நித்திரை செய்தல், க்ஷௌரம் பண்ணுவித்துக் கொள்ளுதல், எண்ணெய் தேய்த்தல், தலைபார்த்தல், மயிர்கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வேட்டி கட்டிக் கொள்ளுதல், தோளிலே உத்தரியம் இட்டுக் கொள்ளுதல், போர்த்துக் கொள்ளுதல், சட்டையிடுதல், வாகனமேறிச் செல்லுதல், குடைபிடித்துக் கொள்ளுதல், தீவர்த்தி பிடித்துக் கொள்ளுதல், உன்னத தானத்திருத்தல், ஆசனத்திருத்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் இடபம் விக்கிரகம் என்னும் இவைகளின் சாயையை மிதித்தல், விக்கிரத்தையும் நிர்மாலியத்தையும் தீண்டுதல், திருவிளக்குச் சாயையிலும் சிவலிங்கச் சாயையிலும் தன்னிழலிடுதல், பெண்களைப் புகழ்தல், பெண்களைத் தீண்டல், பெண்களை இச்சித்துப் பார்த்தல், பெண்களைப் புணர்தல், மேற்கு நோக்கிய சந்நிதியிலும் கிழக்கு நோக்கிய சந்நிதியிலும் இடப்பக்கத்தில் நமஸ்காரமும் செபமும் பண்ணுதல், ஒருதரம் இருதரம் நமஸ்கரித்தல், ஒருதரம் இருதரம் வலம் வருதல், ஓடி வலம்வருதல், சிவபெருமானுக்கும் இடபதேவருக்கும் குறுக்கே போதல், அவர்களுக்குப் புறங்காட்டுதல், ஒருகை குவித்தல், அகாலத்திலே தரிசித்தல், சிவபெருமானுக்கும் பலிபீடத்துக்கும் இடையே நமஸ்கரித்தல், வீண் பேசுதல், அசப்பியம் பேசுதல், அசப்பியங் கேட்டல், சிரித்தல், வீண்கீதம் பாடல், வீண்கீதங் கேட்டல், தேவத்திரவியத்தை இச்சித்தல், கீழ்மக்களைப் புகழ்தல், மேன்மக்களை இகழ்தல், துர்த்தேவதைகளை வழிபடுதல், சிவபெருமானை முற்பக்கத்தும் பிற்பக்கத்தும் இடப்பக்கத்தும் நின்று வணங்குதல், திருவிளக்கவியக் கண்டும் தூண்டாதொழிதல், திருவிளக்கில்லாதபொழுது வணங்குதல், உற்சவங் கொண்டருளும்போது அங்கேயன்றி உள்ளே போய் வணங்குதல், குரவர் முதலியோரை வணங்குதல் முதலியனவாம். சிவதீர்த்தம் திருநந்தவனம் திருமடம் என்னு மிவைகளிலும் மலசலங் கழித்தல், எச்சிலுமிழ்தல், மூக்குநீர்சிந்துதல், புணர்ச்சி முதலிய அசுசிகளைச் செய்யலாகாது. இக்குற்றங்களுள் ஒன்றை அறியாது செய்தவர் உருத்திரஞ் செபிக்கின், அக்குற்றம் நீங்கும். உருத்திரத்துக்கு உரியரல்லாதவர் அகோரமந்திரத்தில் ஆயிரம் உருச் செபிக்கின், அக்குற்றம் நீங்கும். இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் விழுந்து வருந்துவர்; அவருக்குப் பிராயச்சித்தம் இல்லை.

தூரத்திலிருந்து சிவஸ்தல யாத்திரை செய்ய விரும்பினோர், சுபதினத்திலே ஸ்நானஞ் செய்து, நித்திய கர்மங்களை முடித்துக் கொண்டு, கல்வியறிவொழுக்கங்களாற் சிறந்த சற்பிராமணர் முன்னே கையிலே பவித்திரஞ்சேர்த்தி, ‘சிவக்ஷேத்திரயாத்திரை செய்யக்கடவேன்’ என சங்கற்பஞ்செய்து, சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, தருமநெறியான் வந்த பொருளைக் கைக்கொண்டு, வீட்டினின்றும் புறப்பட்டு, காமம் குரோதம் முதலிய தீக்குணங்கள் எல்லாவற்றையும் முற்றக் கடிந்து, பரான்னம் புசித்தலும் பிறர்கைப்பொருளை வாங்குதலும் இல்லாது, நாடோறும் பஞ்சாக்ஷரசெபம் சிவபூசை தேவார பாராயணம் சிவதரிசனம் சிவபுராணசிரவணம் மாகேசுரபூசை முதலியவற்றைச் செய்துகொண்டு செல்லக் கடவர். இப்படிச் சென்று, தாங்குறித்த சிவஸ்தலத்தை அடைந்து, தூரத்தே கோபுரத்தை நமஸ்கரித்து, எழுந்து சென்று, அத்தினத்திலே உணவொழித்து, க்ஷௌரம் பண்ணுவித்துக் கொண்டு, விதிப்படி ஸ்நானஞ்செய்து, பிண்டப்பிரதானம் பண்ணி, உத்தமபாத்திரமாகிய பிராமணருக்குத் தம்மாலியன்ற திரவியங்கள் கொடுத்து, வணங்கக் கடவர்.

தானம் வாங்குதற்கு உரிய உத்தம பாத்திரமாவார்: வேதாமகங்களையும் சிவபுராணங்களையும் ஓதி உணர்ந்தவர்களாய், பாவங்களை முற்றக் கடிந்தவர்களாய், சந்தியாவந்தனம் சிவபூசை முதலிய கருமங்களைத் தவறாமல் விதிப்படி சிரத்தையோடு செய்பவர்களாய் இல்லறத்தில் வாழ்பவர்களாய், வறியவர்களாய் உள்ள பிராமணர்கள். இவர்களல்லாத பிறருக்குத் தானஞ் செய்தவர் பத்துப்பிறப்பு ஒந்தியாயும், மூன்று பிறப்புக் கழுதையாயும், இரண்டு பிறப்புத் தவளையாயும், ஒரு பிறப்பு சண்டாளராயும், பின் சூத்திரராயும், வைசியராயும், அரசராயும், பிராமணராயும் பிறந்து வறுமையினாலும் நோயினாலும் வருந்தி உழலுவர். ஆதலா, உத்தமபாத்திரராகிய பிராமணருக்கே தானஞ்செய்தல் வேண்டும். அத்தலத்தில் உத்தமர் இல்லையாயின், தம்மாலியன்ற பொருளை, வேறு தலத்துள்ள உத்தமரைச் சுட்டிச் சங்கற்பித்து, உதகங் கொடுத்து, அவரிடத்துக்குக் கொண்டுபோய்க் கொடுத்தல்வேண்டும். அவர் இறந்தாராயின், அவர் புத்திரருக்குக் கொடுத்தல் வேண்டும். அவரும் இறந்தாராயின் சிவபெருமானுக்குக் கொடுத்தல் வேண்டும்.

மூன்றுநாளாயினும், ஐந்துநாளாயினும், பதினைந்து நாளாயினும், ஒருமாசமாயினும், ஒருவருடமாயினும், அந்தத் தலத்திலே நாடோறும் சிவதீர்த்தத்திலே ஸ்நானம் பண்ணி, சிவபூசையும் சிவாலயதரிசனமும் இயன்ற மட்டும் மாகேசுரபூசையும் செய்துகொண்டும், சைவ நூல்களை ஆராய்ந்து கொண்டும் வசிக்கக் கடவர். பொருளில்லாதவர் சிவனடியார்களுக்கு ஒருமுட்டி பிச்சையாயினும் கொடுத்துண்ணக்கடவர். தாங்குறித்த நாளெல்லை கடந்தபின், சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக் கொண்டு, திருக்கோயில் புறத்துவந்து, கோபுரத்தை நமஸ்கரித்துச் சென்று, திருவெல்லையை நமஸ்கரித்து, முன்சொன்ன நியமத்துடனே தம்மூரை அடைந்து, பிராமண போசனமும் மாகேசுரபூசையும் செய்யக்கடவர்.

பெறுதற்கரிய மனிதப்பிறப்பை உடையவர்களாய், மெய்ந்நூல்களாகிய வேதாமகங்கள் வழங்கும் புண்ணிய பூமியாகிய இப்பரதகண்டத்திலே தவஞ்செய் சாதியிலே சைவமரபிலே பிறந்தும், அனேகர் இவைகளின் அருமையைச் சிறிதும் சிந்தியாதும், கருணாநிதியாகிய சிவபெருமானுடைய மகிமையையும், புண்ணியபாவங்களையும் அவைகளின் பலங்களையும் கற்றாயினும் கேட்டாயினும் அறியாதும், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களைச் செய்யாதும், தமது வாழ்நாளை வீணாகக் கழித்து, எரிவாய்நரகத்துக்கு இரையாகுகின்றார்கள். சிலர் ஒரோ வழிச் சிவ புண்ணியங்களைச் செய்யப்புகுந்தும், அவைகளைச் செய்யும் முறைமைகளைச் சிறிதும் அறியாமல், குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளுதல் போல, பாவத்தையே ஈட்டிக் கொள்ளுகிறார்கள். இப்படிக் கெட்டுப் போகாது, நமது சைவசமயிகள் இம் மனிதப்பிறப்புப் பெறுதற்கரியதென்பதையும், இது நீங்கும் அவதி அறிவதற்கரியதென்பதையுஞ் சிந்தித்து, இந்தப் பிரபந்தத்தை வாசித்தறிந்து, பாவங்களை வெறுத்து, சிவபெருமானுடைய திருவடிகளைத் தங்கள் மனம் வாக்குக் காயங்களினாலே விதிப்படி மெய்யன்போடு வழிபட்டு, நித்தியமாகிய பேரின்பத்தை பெற்றுய்யக் கடவர்கள்.

பிரமோத்தரகாண்டம்

கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள்
கறைக்கண்டன் கோயில்புகும் கால்களே கால்கள்
பெண்ணொருபா கனைப்பணியுந் தலைகளே தலைகள்
பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள்
பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னாப்
பரன்சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிகள்
அண்ணல்பொலங் கழனினைக்கு நெஞ்சமே நெஞ்சம்
அவனடிக்கீ ழடிமைபுகு மடிமையே யடிமை.

திருத்தாண்டகம்

நிலைபெறுமா றெண்ணுதியே நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் மாதீ யென்றும்
ஆரூரா வென்றென்றே யலறா நில்லே.

திருச்சிற்றம்பலம்

மெய்கண்டதேசிகன் றிருவடி வாழ்க.

Advertisements

Tags:

One Response to “சிவாலய தரிசன விதி”

  1. professionals Says:

    Amazing…Liked it… Keep writing.. ^_^

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: