மூர்த்திநாயனார் புராணம்


வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம்
வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத்
தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த வூறுந்
தவிர்ந்தமணர் வஞ்சனையுந் தவிர மன்ன
னிழந்தவுயி ரினனாக ஞால நல்க
வெழில்வேணி முடியாக விலங்கு வேட
முழங்குபுக ழணியாக விரைநீ றாக
மும்மையுல காண்டருளின் முன்னி னாரே.

பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, வைசியர் குலத்திலே சிவபத்தியே ஒருவடிவெடுத்தாற்போலும் மூர்த்திநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்த ஸ்தலத்திலே வீற்றிருக்கின்ற சோமசுந்தரக்கடவுளுக்குத் தரிக்கும் பொருட்டுத் தினந்தோறும் சந்தனக்காப்புக் கொடுத்து வருங்காலத்திலே; கருணாடதேசத்தரசன் சதுரங்க சேனைகளோடும் அம்மதுரைக்கு வந்து, பாண்டியனோடு யுத்தஞ் செய்து அவனைவென்று, அந்நகருக்கு அரசனாயினான். அவன் புறச்சமயிகளாகிய சமணர்களுடைய போதனார்த்தியினாலே ஆருகதமதத்திற் பிரவேசித்து, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்வானாயினான் ஆயினும், மூர்த்திநாயனார் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாது செய்து வந்தார்.

அது கண்டு, அரசன் அவரை ஆருகதமதத்திலே பிரவேசிப்பித்திற்கு உத்தேசித்து, அவருக்குப் பல கொடுஞ்செய்கைகளைச் செய்தான். செய்தும், அவர் தம்முடைய திருப்பணியினின்றும் சிறிதும் வழுவாதவராயினார். அது பற்றி அவ்வரசன் அவர் சந்தனக்கட்டை வாங்குமிடங்களிளெல்லாம் அவருக்குக் கொடுக்க வொட்டாமற். றடுத்தான். அதனால் அவர் மனநொந்து, “இப்பாண்டி நாடு, துர்ச்சமயமாகிய ஆருகதசமயத்திலே பிரவேசித்துச் சிவபுண்ணியத்துக்கு இடையூறுசெய்கின்ற அதிபாதனாகிய இவ்வரசன் இறக்க, சற்சமயமாகிய சைவசமயத்தை வளர்க்கின்ற அரசரைச் சாருங்காலம் எக்காலம்” என்று நினைந்து துக்கித்து, பகற்காலமுழுதும் சந்தனக்கட்டை தேடித் திரிந்து, எங்கும் பெறாமையால் ஆலயத்துக்குவந்து, “சுவாமிக்குத்தரிப்பதற்குத் தேய்த்துக் கொடுக்கும்பொருட்டுச் சந்தனக்கட்டைக்கு இன்றைக்கு முட்டு வந்தாலும், அக்கட்டையைப் போலத் தேய்க்கத்தக்க கைக்கு ஒரு முட்டும் இல்லை” என்று ஒரு சந்தனக் கல்லிலே தம்முடைய முழங்கையை வைத்து, தோலும் நரம்பும் எலும்பு தேய்ந்து குறையும்படி தேய்த்தார். தேய்த்தலும், உதிரம் ஒழுகி நாற்புறத்திலும் பெருகி எலும்பினுள்ளே இருக்கும் துவாரந்திறந்து மூளை வெளியிலே வந்தது. அப்பொழுது, “அன்பனே! நீ பத்தியினது உறுதிப்பாட்டினால் இப்படிப்பட்ட செய்கையைச் செய்யாதே. உனக்கு இடுக்கண்செய்த, கொடுங்கோலரசன் பெற்ற இந்நாடு முழுவதையும் நீயே கைக்கொண்டு இதற்கு முன் இவ்விடத்திலே அவனாலுண்டாகிய கொடுமைகள் யாவற்றையும் நீக்கி, பரிபாலனஞ்செய்து, உன்னுடைய பணியை நடப்பித்து, பின்பு நம்முடைய சிவலோகத்தை அடைதி” என்று ஒரு அசரீரிவாக்கு எழுந்தது. மூர்த்திநாயனார் அதைக் கேட்டு, அஞ்சி, கையைத் தேய்த்தலை ஒழிந்து எழுந்தார். உடனே அவர் கையானது தேய்த்தனாலாகிய ஊறு நீங்கி முன்போலாயிற்று.

அவ்விரவிலே அந்தக்கருணாடராஜன் இறந்து, சிவனடியார்களுக்கு வருத்தஞ்செய்த அதிபாதகத்தினாலே கொடுமையாகிய நரகத்திலே விழுந்தான். மற்ற நாள் பிராதக் காலத்திலே மந்திரிமார்கள் கூடி, தகனசமஸ்காரஞ் செய்து, பின்னர்த் தங்கள் அரசனுக்குப் புத்திரர் இல்லாமையால் வேறொருவரை அரசராக நியோகித்தற்கு உபாயத்தை ஆலோசித்து, “யானையைக் கண்கட்டிவிடுவோம், அந்த யானை எவரை எடுத்துக்கொண்டுவருமோ அவரே இந்நாட்டுக்கு அரசராவார்” என்று நிச்சயித்துக்கொண்டு, யானையை விதிப்படி அருச்சித்து, “நீ இந்த நாட்டை ஆளுதற்குவல்ல ஒருவரையெடுத்துக் கொண்டு வா” என்று சொல்லி, அதை வஸ்திரங்கொண்டு கண்ணைக் கட்டி விட்டார்கள். அந்த யானை அந்தப்பட்டணத்து வீதிகளிலே திரிந்து சென்று, சொக்கநாத சுவாமியுடைய ஆலயத்தின் கோபுரத்துக்கு முன்னே போயிற்று. மூர்த்தி நாயனார் இரவிலே தமக்குச் செவிப்புலப்பட்ட அசரீரிவாக்கினால் மனத்துயரம் நீங்கி “நமது கடவுளாகிய பரமசிவனுக்குத் திருவுளமாகில் அடியேன் இந்த நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்” என்று நினைத்துக்கொண்டு, திருக்கோயிற்புறத்திலே நின்றார். யானையானது அவர் திருமுன்னே சென்று தாழ்ந்து, அவரை எடுத்து, முதுகின்மேல் வைத்துக்கொண்டது. அது கண்ட மந்திரிமார்கள் அவரை நமஸ்கரித்து, யானையின் முதுகினின்றும் இறக்கி, முடிசூட்டு மண்டபத்திலே கொண்டு போய், ஒரு சிங்காசனத்தின்மேல் இருத்தி, மூடி சூட்டுக்கு வேண்டும் மங்கலகிருத்தியங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். மூர்த்திநாயனார் அவர்களை நோக்கி, “ஆருகதமதம் நீங்கிச் சைவசமயம் விருத்தியாபின் நான் இந்நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்” என்றார். அதைக்கேட்ட மந்திரிமார்களும் சாஸ்திரபரிசயமுள்ள பிறரும் அவரை வணங்கி நின்று, “சுவாமீ! தேவரீருடைய ஆஞ்ஞையின்படியேயன்றி அதற்கு மாறாக யாவர் செய்வார்கள்” என்று சொன்னார்கள். பின்பு மூர்த்திநாயனார் “நான் அரசாள்வேனாகில், எனக்கு விபூதியே அபிஷேகத்திரவியமும், உருத்திராட்சமே ஆபரணமும், சடாமுடியே கிரீடமும் ஆகுக” என்றார். அவர்கள் “தேவரீர் அருளிச்செய்தபடியே ஆகுக” என்று சொல்லி, மகுடாபிஷேகத்துக்கு வேண்டும் செய்கைகளைச் செய்து நிறைவேற்றினார்கள்.

மூர்த்திநாயனார் சடைமுடி தரித்து ஆலயத்திற்சென்று சோமசுந்தரக்கடவுளை வணங்கிக்கொண்டு யானையின்மேல் ஏறி. இராசமாளிகையைச் சேர்ந்தார். அங்கே அத்தாணி மண்டபத்திலே இரத்தின சிங்காசனத்தின் மேலே தவளச் சந்திரநிழலிலே வீற்றிருந்துகொண்டு, பொய்ச்சமயமாகிய ஆருகதம் நீங்கவும், மெய்ச்சமயமாகிய சைவசமயமே எங்கும் விளங்கவும், பெண்ணாசை சிறிதுமின்றி, நெடுங்காலம் விபூதி உருத்திராக்ஷம் சடைமுடி என்கின்ற மூன்றினாலும் அரசாண்டு, பின் சிவபதப் பிராப்தியானார்.

Advertisements

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: