மெய்ப்பொருணாயனார் புராணம்


சேதிபர்நற் கோவலூர் மலாட மன்னர்
திருவேட மெய்ப்பொருளாத் தெளிந்த சிந்தை
நீதியனா ரூடன்பொருது தோற்ற மாற்றா
னெடுஞ்சினமுங் கொடும்பகையு நிகழா வண்ண
மாதவர்போ லொருமுறைகொண்ட டணுகி வாளால்
வன்னமபுரிந் திடமருண்டு வந்த தத்தன்
காதலுற நமர்தத்தா வென்று நோக்கிக்
கடிதகல்வித் திறைவனடி கைகொண் டாரே.

சேதிநாட்டிலே திருக்கோவலூரிலே, மலையமானாட்டாருக்கு அரசரும், வேதாகமங்களின் உண்மையை அறிந்த வரும், சிவனடியார்களுடைய திருவேடத்தையே மெய்ப்பொருளெனச் சிந்தைசெய்பவருமாகிய மெய்ப்பொருணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய இராச்சியத்தைத் தருமநெறி தவறாமல் நடத்தியும், தம்மை எதிர்த்த பகைவர்களை ஜயங்கொண்டு, சிவாலயங்களெங்கும் நித்திய நைமித்திகங்களைச் சிறப்பாக நடத்தியும், சிவபத்தர்கள் வந்தபொழுது மனமகிழ்ச்சியோடும் வேண்டிய திரவியங்களைப் பூர்த்தியாகக் கொடுத்தும் வந்தார்.

இப்படி நடக்கும் காலத்திலே, முத்திநாதன் என்கின்ற ஓரரசனானவன் அவரை வெல்லுதற்கு விரும்பி, யுத்தசந்நத்தனாகி, அவரோடு பொருது, யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சேனைகளைப் பலமுறை இழந்து, தோற்று அவமானப் பட்டுப்போனான், பின்பு அவன்யுத்தத்தினாலே அவரை ஜயிக்கமாட்டாதவனாகி, அவரிடத்திலே இருக்கின்ற அடியார் பக்தியை அறிந்து, விபூதி தரிக்கின்ற அவ்வடியார்வேடங் கொண்டு அவரைக் கபடத்தினால் வெல்ல நினைந்து, சரீர முழுவதிலும் விபூதி தரித்து, சடைகளைச் சேர்த்துக் கட்டி புத்தகக்கவளிபோலத் தோன்றுகின்ற ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கின்ற ஓர் கவளியை எடுத்துக்கொண்டு, திருக்கோவலூரிற் சென்று. மெய்ப்பொருணாயனாருடைய திருமாளிகைவாயிலை அடைந்தான். அப்பொழுது வாயிற்காவலாளர் அவனை அஞ்சலிசெய்து, “சுவாமீ! உள்ளே எழுந்தருளும்” என்று சொல்ல; அம்முத்திநாதன் உள்ளே போய், மற்றவாயில்களையும் அப்படியே கடந்து சென்று இறுதி வாயிலை அடைந்தபொழுது, அவ்வாயிற் காவலாளனாகிய தத்தனென்பவன் “இப்பொழுது இராசா நித்திரை செய்கின்றார். நீர் சமயமறிந்து, போகவேண்டும்” என்றான். அதைக்கேட்ட முத்திநாதன் “நான் அவருக்குச் சாஸ்திரோபதேசஞ் செய்யப்போன்கின்றபடியால், நீ என்னைத் தடுக்கலாகாது” என்று சொல்லி, உள்ளே புகுந்து, மெய்ப்பொருணாயனார் கட்டிலிலே நித்திரைசெய்ய அவர்மனைவியார் பக்கத்திலிருக்கக் கண்டும், சமீபத்திலே சென்றான்.

அப்பொழுது, மனைவியார் சீக்கிரம் எழுந்து, மெய்ப்பொருணாயனாரை எழுப்ப; அவர் விழித்தெழுந்து, அவனை எதிர்கொண்டு வணங்கி நின்று; “சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளுதற்குக் காரணம் யாது” என்று வினாவினார். அதற்கு முத்திநாதன் “உங்கள் கடவுளாகிய பரமசிவன் ஆதிகாலத்திலே அருளிச்செய்த சைவாகமங்களுள் எவ்விடத்துங் காணப்படாத ஓராகமத்தை உமக்கு போதிக்கும்படி கொண்டு வந்தேன்” என்றான், மெய்பொருணாயனார் அதைக் கேட்டு, “இதைப்பார்க்கிலும் உயர்ந்தபேறு அடியேனுக்கு உண்டோ? அந்தச் சைவாகமகத்தை வாசித்து அடியேனுக்கு அதன்பொருளை அருளிச்செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க முத்திநாதன் “பட்டத்தரசி இல்லாமல் நீரும் நானும் வேறிடத்திருக்கவேண்டும்” என்றான். உடனே மெய்ப்பொருணாயனார் தம்முடைய மனைவியாரை அந்தப்புரத்துக்குப் போம்படி செய்து, பொய்வேடங் கொண்ட முத்திநாதனை ஆசனத்தின் மேல் இருத்தி, தாம் கீழே இருந்துகொண்டு, “இனி அருளிச் செய்யும்” என்றார். முத்திநாதன் தன்கையில் இருந்த வஞ்சகக் கவளிகையை மடியின்மேல் வைத்து, புத்தகம் அவழிப்பவன் போல அவிழ்த்து, மெய்ப்பொருணாயனார் வணங்கும்போது, அக்கவளிகையில் மறைத்து வைத்த உடைவாளை எடுத்து, அவரைக்குத்த; அவர் சிவவேடமே மெய்ப்பொருலென்று அவனை வணங்கினார். அம்முத்திநாதன் உள்ளே புகுந்த பொழுதே “இராசாவுக்கு என்ன அபாயம் சம்பவிக்குமோ” என்று மனசை அங்கேயே செலுத்திக்கொண்டிருந்த தத்தனென்பவன் நொடியளவிலே உள்ளே புகுந்து, தன்கை வாளினால் அப்பகைவனை வெட்டப்போனான். அதற்குமுன் உடைவாளினாலே குத்தப்பட்டு இரத்தஞ்சொரிய விழப்போகின்ற மெய்ப்பொருணாயனார், விழும்பொழுது தத்தனே, இவர் சிவனடியாராதலால் இவருக்கு ஓரிடையூறும் செய்யாதே” என்று கையினாலே தடுத்து விழுந்தார். அப்பொழுது தத்தன் மெய்பொருணாயனாரைத் தலையினால் வணங்கி, அவரைத் தாங்கி, “அடியேன் செய்யவேண்டிய குற்றேவல் யாது” என்று கேட்க: மெய்ப்பொருணாயனார் “வழியிலே இவருக்கு யாவரொருவரும் இடையூறு செய்யாதபடி இவரை அழைத்துக் கொண்டு போய் விடு” என்று சொன்னார். அப்படியே தத்தன் முத்திநாதனை அழைத்துக் கொண்டு போம்பொழுது அம்முத்திநாதன் இராசாவைக் குத்தின சங்கதியை அறிந்தவர்களெல்லாரும் அவனைக் கொல்லும்படி வந்து சூழச்சூழ, அவர்களெல்லாரையும், ‘இந்தச் சிவபத்தருக்கு ஒருவரும் இடையூறுசெய்யாதபடி இவரை அழைத்துக்கொண்டுபோய் விடும்பொருட்டு இராசாவே எனக்கு ஆஞ்ஞாபித்தார்” என்று சொல்லி, தடுத்தான். அவர்களெல்லாரும் அதைக் கேட்டவுடனே பயந்து நீங்கிவிட: தத்தன் அவனை அழைத்துக்கொண்டு நகரத்தைக் கடந்து சென்று, அவனுக்குரிய நாட்டுவழியிலே அவனை விட்டு, நகரத்துக்குத் திரும்பி, சிவவேடங்கொண்ட முத்திநாதனை யாதொரு இடையூறும் வராமல் அழைத்துக் கொண்டு போய்விட்ட சமாசாரத்தைக் கேட்பதற்கு விரும்பி முன்னேயே நீங்கிவிடக்கூடிய உயிரைத்தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருணாயனாருக்குமுன் சென்று, வணங்கி நின்று, “சிவபத்தரை இடையூறு ஒன்றும் வராதபடி கொண்டுபோய்விட்டேன்” என்று சொன்னான். அதைக் கேட்ட மெய்பொருணாயனார் ‘இன்றைக்குநீ எனக்குச் செய்த உபகாரத்தை வேறார்செய்ய வல்லார்” என்று சொல்லி, பின்பு தமக்குப் பின் அரசாளுதற்குறிய குமாரர்களையும் மந்திரிமுதலானவர்களையும் நோக்கி, சைவாகமவிதிப்படி விபூதிமேல் வைத்த அன்பைப் பாதுகாக்கும்படி போதித்து, கனகசபையிலே ஆனந்ததாண்டவம் செய்தருளுகின்ற சபாநாதரைத் தியானம்பண்ணினார். அப்பொழுது சபாநாதர் மெய்ப்பொருணாயனாருக்குத் தோன்றி, அவரைத் தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார்.

Advertisements

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: