Posts Tagged ‘ஏனாதிநாதநாயனார் புராணம்’

ஏனாதிநாதநாயனார் புராணம்

07/24/2011

ஈழக் குலச்சான்றா ரெயின னூர்வா
ழேனாதி நாதனா ரிறைவ னீற்றைத்
தாழத் தொழுமரபார் படைக ளாற்றுந்
தன்மைபெறா வதிசூரன் சமரிற் றோற்று
வாழத் திருநீறு சாத்தக் கண்டு
மருண்டார்தெ ருண்டார்கை வாள்வி டார்நேர்
வீழக் களிப்பார்போ னின்றே யாக்கை
விடுவித்துச் சிவனருளே மேவி னாரே.

சோழமண்டலத்திலே, எயினனூரிலே, சான்றார்குலத்திலே விபூதியில் மகாபத்தியுடையவராகிய ஏனாதிநாதர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசர்களுக்கு வாள் வித்தையைப் பயிற்றி, அதனால் வந்த வளங்கள் எல்லாவற்றையும் சிவனடியார்களுக்கு நாடோறும் கொடுத்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்தில், வாள்வித்தை பயிற்றலிலே அவரோடு தாயபாகம் பெற்ற அதிசூரன் வாள்வித்தை பயிற்றுதலினால்வரும் ஊதியம் நாடோறும் தனக்குக் குறை தலையும் ஏனாதி நாதநாயனாருக்கு வளர்தலையுங் கண்டு, பொறாமையுற்று, அவரோடு போர்செய்யக் கருதி, வீரர் கூட்டத்தோடும் போய். அவர் வீட்டுத் தலைக்கடையில் நின்று, போர்செய்தற்கு வரும்படி அழைக்க, ஏனாதிநாத நாயனார் யுத்தசந்நத்தராகிப் புறப்பட்டார். அப்பொழுது அவரிடத்திலே போர்த்தொழில் கற்கும் மாணாக்கர்களும் யுத்தத்திலே சமர்த்தர்களாகிய அவர்பந்துக்களும் அதைக் கேள்வியுற்று, விரைந்து வந்து, அவருக்கு இரண்டு பக்கத்திலும் சூழ்ந்தார்கள். போருக்கு அறைகூவிய அதிசூரன் ஏனாதிநாதநாயனாரை நோக்கி, “நாம் இருவரும் இதற்குச் சமீபமாகிய வெளியிலே சேனைகளை அணிவகுத்து யுத்தஞ் செய்வோம். யுத்தத்திலே வெற்றிகொள்பவர் எவரோ அவரே வாள்வித்தை பயிற்றும் உரிமையைப் பெறல் வேண்டும்” என்று சொல்ல; ஏனாதிநாதநாயனாரும் அதற்கு உடன்பட்டார். இருவரும் தங்கள் தங்கள் சேனைகளோடு அவ்வெளியிலே போய், கலந்து யுத்தஞ்செய்தார்கள். யுத்தத்திலே அதிசூரன் ஏனாதிநாதநாயனாருக்குத் தோற்று, எஞ்சிய சில சேனைகளோடும் புறங்காட்டியோடினான்.

அன்றிரவு முழுதும் அவன் தன்னுடைய தெளர்பலியத்தை நினைந்து, நித்திரையின்றித் துக்கித்துக்கொண்டிருந்து, ஏனாதிநாதநாயனாரை வெல்லுதற்கேற்ற உபாயத்தை ஆலோசித்து, வஞ்சனையினாலே ஐயிக்கும்படி துணிந்து, விடியற்காலத்திலே “நமக்கு உதவியாக நம்முடையவூரவர்களை அழைத்துக் கொள்ளாமல் நாம் இருவரும் வேறோரிடத்திலே போர் செய்வோம், வாரும்” என்று ஏனாதிநாதநாயனாருக்குத் தெரிவிக்கும்படி ஒருவனை அனுப்பினான். ஏனாதிநாதநாயனார் அதைக் கேட்டு, அதற்கு உடன்பட்டுத் தம்முடைய சுற்றத்தவர்கள் ஒருவரும் அறியாதபடி வாளையும் பரிசையையும் எடுத்துக் கொண்டு, தனியே புறப்பட்டு; அவ்வதிசூரன், குறித்த யுத்த களத்திலே சென்று, அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார். முன்னொருபொழுதும் விபூதி தரியாத அதிசூரன், விபூதி தரித்தவர்களுக்கு ஏனாதிநாதநாயனார் எவ்விடத்திலும் துன்பஞ் செய்யார் என்பதை அறிந்து, நெற்றியிலே விபூதியைப்பூசி, வாளையும் பரிசையையும், எடுத்துக்கொண்டு, தான் குறித்த யுத்தகளத்திற்சென்று, அங்கு நின்ற ஏனாதிநாதநாயனாரைக் கண்டு, அவர் சமீபத்திலே போம்வரைக்கும் நெற்றியைப் பரிசையினால் மறைத்துக்கொண்டு; அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனாதிநாதநாயனார் அவ்வதி சூரனைக் கொல்லுதற்குச் சமயந்தெரிந்துகொண்டு அடிபெயர்த்தார். அப்பொழுது அதிசூரன் தன்முகத்தை மறைத்துக் கொண்டிருந்த பரிசையைப் புறத்திலே எடுக்க; ஏனாதிநாதநாயனார் அவனுடைய நெற்றியிலே தரிக்கப்பட்ட விபூதியைக் கண்டார். கண்டபொழுதே “ஆ கெட்டேன்! முன் ஒருபொழுதும் இவர் நெற்றியிலே காணாத விபூதியை இன்றைக்குக் கண்டேன். இனி வேறென்ன ஆலோசனை! இவர் பரமசிவனுக்கு அடியவராய் விட்டார். ஆதலால் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்” என்று திருவுள்ளத்திலே நினைந்து, வாளையும் பரிசையையும் விடக் கருதி, பின்பு “நிராயுதரைக் கொன்ற தோஷம் இவரை அடையாதிருக்க வேண்டும்” என்று எண்ணி, அவைகளை விடாமல் எதிர்ப்பவர் போல நேராக நிற்க; பாதகனாகிய அதிசூரன் அவரைக் கொன்றான். அப்பொழுது பரமசிவன் அவருக்குத் தோன்றி அவரைத் தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார்.

Advertisements

%d bloggers like this: