Posts Tagged ‘திருநாளைப்போவார்நாயனார் புராணம்’

திருநாளைப்போவார்நாயனார் புராணம்

07/24/2011

நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்
மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ
நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்
பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்
பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி
வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த
வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற
மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்
விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

சோழமண்டலத்திலே கொள்ளிடநதியின் பக்கத்துள்ள மேற்காநாட்டிலே, ஆதனூரிலே, புலையர்குலத்திலே, நந்தனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி, மற்றொன்றையும் மறந்தும் நினையாதவர். அவ்வூரிலே தமக்கு வெட்டிமைக்காக விடப்பட்டிருக்கின்ற மானியமாகிய நிலத்தின் விளைவினாலே சீவனஞ் செய்து கொண்டு, தாஞ்செய்யவேண்டும் தொழிலை நடத்துகின்றவர்; சிவாலயங்கடோறும், பேரிகைமுதலாகிய ஒருமுகக்கருவிகளுக்கும் மத்தளமுதலாகிய இருமுகக்கருவிகளுக்கும் தோலும் வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுக்கின்றவர்; ஆலயங்களின் திருவாயிற்புறத்தில் நின்றுகொண்டு அன்பின் மேலீட்டினால் கூத்தாடிப் பாடுகின்றவர்.

அவர் ஒருநாள் திருப்புன்கூரிலே போய்ச் சுவாமிதரிசனம் பண்ணித் திருப்பணி செய்தற்கு விரும்பி, அங்கே சென்று திருக்கோயில்வாயிலிலே நின்றுகொண்டு, சுவாமியை நேரே தரிசித்துக் கும்பிடவேண்டும் என்று நினைத்தார். சுவாமி அவருடைய விருப்பத்தின்படியே தமக்கு முன்னிருக்கின்ற இடபதேவரை விலகும்படி செய்து, அவருக்குக் காட்சி கொடுத்தருளினார். நந்தனார் அந்த ஸ்தலத்திலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரிய குளமாக வெட்டித் தம்முடைய ஊருக்குத் திரும்பினார்.

அவர் இப்படியே பல ஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்து வந்தார். ஒருநாள், சிதம்பர ஸ்தலத்திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு, அவ்வாசை மிகுதியினாலே அன்றிரவு முழுதும் நித்திரை செய்யாதவராகி, விடிந்தபின் “நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே” என்று துக்கித்து, “இதுவும் சுவாமியுடைய அருள்தான்” என்று சொல்லிப் போகாதொழிந்தார். பின்னும் ஆசைவளர்தலால் “நாளைக்குப் போவேன்” என்றார். இப்படியே “நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன்” என்று அநேக நாட்கள் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.

ஒருநாள் அவர் சிதம்பர தரிசனம் பண்ணவேண்டும் என்னும் ஆசை பிடித்துந்துதலால், தம்முடைய ஊரினின்றும் பிரஸ்தானமாகி, சிதம்பரத்தின் எல்லையை அடைந்தார்.

அத்திருப்பதியைச் சுற்றிய திருமதில்வாயிலிலே புகுந்து, அங்குள்ள பிராமணர்களுடைய வீடுகளிலே ஓமஞ் செய்யப்படுதலைக் கண்டு, உள்ளே போதற்கு அஞ்சி, அங்கே நமஸ்கரித்து அத்திரு வெல்லையை வலஞ்செய்துகொண்டு போவார். இப்படி இராப்பகல் வலஞ் செய்து உள்ளே போகக் கூடாமையை நினைத்து வருந்துகின்ற திருநாளைப்போவார் “சபாநாயகரை எப்படித் தரிசிக்கலாம்? இந்த இழிந்த பிறப்பு இதற்குத் தடைசெய்கின்றதே! என்று துக்கத்தோடும் நித்திரை செய்தார். சபாநாயகர் அவருடைய வருத்தத்தை நீக்கி அவருக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு, அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, “நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து, பிராமணர்களோடும் நம்முடைய சந்நிதானத்தில் வருவாய் என்று அருளிச்செய்து, தில்லைவாழ்ந்தணர்களுக்கும் சொப்பனத்திலே தோன்றி, அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். தில்லை வாழந்தணர்கள் எல்லாரும் விழித்தெழுந்து, திருக்கோயிலிலே வந்துகூடி, சபாநாயகர் ஆஞ்ஞாபித்தபடி செய்வோம்” என்று சொல்லி, திருநாளைப்போவாரிடத்திலே சென்று “ஐயரே! சபாநாயகருடைய ஆஞ்ஞையினாலே இப்பொழுது உம்பொருட்டு நெருப்பு வளர்க்கும்படி வந்தோம்” என்றார்கள். அதைக்கேட்ட திருநாளைப்போவார் “அடியேன் உய்ந்தேன்” என்று சொல்லி வணங்கினார். பிராமணர்கள் தென்மதிற்புறத்திலே கோபுரவாயிலுக்கு முன்னே ஒரு குழியிலே நெருப்பு வளர்த்து, அதைத் திருநாளைப் போவாருக்குப் போய்த் தெரிவித்தார்கள். திருநாளைப்போவார் அந்நெருப்புக் குழியை அடைந்து, சபாநாயகருடைய திருவடிகளை மனசிலே தியானம் பண்ணி, அதனை வலஞ்செய்து கும்பிட்டுக்கொண்டு, அதனுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அந்தத் தேகத்தை ஒழித்து, புண்ணிய மயமாகிய பிராமணமுனி வடிவங்கொண்டு உபவீதத்தோடும் சடைமுடியோடும் எழுந்தார். அதுகண்டு தில்லைவாழந்தணர்களும் மற்றைச் சிவபத்தர்களும் அஞ்சலிசெய்து களிப்படைந்தார்கள். திருநாளைப்போவார், அவர்கள் உடன் செல்லச் சென்று கோபுரத்தை அணுகி, அதனை நமஸ்கரித்து எழுந்து, உள்ளே போய் கனகசபையை அடைந்தார். பின் அவரை அங்கு நின்ற பிராமணர் முதலியோர் யாவரும் காணாமையால் ஆச்சரியங்கொண்டு ஸ்தோத்திரஞ் செய்தார்கள். சபாநாயகர் திருநாளைப்போவாருக்குத் தம்முடைய ஸ்ரீபாதங்களைக் கொடுத்தருளினார்.

Advertisements

%d bloggers like this: