Posts Tagged ‘திருமூலநாயனார் புராணம்’

திருமூலநாயனார் புராணம்

07/24/2011

கயிலாயத் தொருசித்தர் பொதியிற் சேர்வார்
காவிரிசூழ் சாத்தனூர் கருது மூலன்
பயிலாநோ யுடன்வீயத் துயரம் நீடும்
பசுக்களைக்கண்டு அவனுடலிற் பாய்ந்துபோத
அயலாகப் பண்டையுடல் அருளால் மேவி
ஆவடுதண் டுறையாண்டுக்கு ஒருபா வாகக்
குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்
கோதிலா வடகயிலை குறுகி னாரே.

 

திருக்கைலாசத்திலே, சிவபெருமானது ஆலயத்துக்கு முதற்பெருநாயகராகிய திருநந்திதேவருடைய திருவருளைப் பெற்ற மாணாக்கர்களாகிய சிவயோகிகளுள் ஒருவர், அகத்திய மகாமுனிவரிடத்தே பொருந்திய நண்பினாலே அவருடன் சிலநாள் இருத்தற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் பொதியமலையை அடைதற்பொருட்டு, திருக்கைலாசத்தை அகன்று வழிக்கொண்டு, திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே சுவாமி தரிசனஞ்செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்திலே பசுக்கூட்டங்கள அழுதலை எதிரே கண்டார். சாத்தனூரில் இருக்கின்ற இடையனாகிய மூலனென்பவன் ஒருவன் அவைகளை மேய்க்கின்றவன். அவன் அத்தினத்திலே அவ்விடத்தில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவனுடைய சரீரத்தை வந்தணைந்து, சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோப்பனவாக; சிவயோகியார் கண்டு, “பரமசிவனது திருவருளினாலே இப்பசுக்களுடைய துயரத்தை நீக்கல் வேண்டும்” என்று ஆலோசித்து, “இவ்விடையன் உயிர் பெற்றெழுந்தாலன்றிப் பசுக்கள் துயரநீங்கா” என்று திருவுளங் கொண்டு தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவ்விடையனுடைய சரீரத்தினுள்ளே பிரவேசித்து, திருமூலராய் எழுதார். எழுதலும், பசுக்களெல்லாம் நாத்தழும்ப நக்கி மோந்து, கனைத்து, மிகுந்த களிப்பினாலே வாலெடுத்துத் துள்ளி, பின்புபோய் மேய்ந்தன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற்சென்று, அவைகளை நன்றாக மேய்த்தார். சூரியன் அஸ்தமயனமாக, பசுக்கள் தத்தங் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் வீடுகடோறும் போகத் தாம் வெளியிலே நின்றார்.

மூலனுடைய மனைவி “நாயகர் இன்றைக்கு மிகத் தாழ்த்தார்” என்று பயங்கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, “இவருக்கு ஈனம் அடுத்தது போலும்” என்று. அவருடைய திருமேனியைத் தீண்ட; அவர் அதற்கு இசையாராயினார். அவள் அச்சுற்று மயங்கி, “என்செய்தீர்” என்று, தளர, திருமூலநாயனார் “உனக்கு என்னோடு யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று மறுத்து, ஒரு பொதும்டத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அவ்விரவு முழுதிலும் நித்திரை செய்யாது கவலை கொண்டிருந்து, மற்ற நாள் அதனை விவேகிகள் பலருக்குத் தெரிவிக்க; அவர்கள் வந்து பார்த்து, அவளை நோக்கி, “இது பைத்தியமன்று, வேறு சார்புள்ளதுமன்று. இவர் கருத்துச் சிவயோகத்தினிடத்தேயாம். இனி இவர் உங்கள் சுற்றவியல்போடு கூடார்” என்றார்கள். அவள் அது கேட்டுத் துயரம் எய்தி மயங்க; அவர்கள் அவளைக் கொண்டு போய்விட்டார்கள்.

சிவயோகத்தில் இருந்து திருமூலநாயனார் எழுந்து, முதனாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தாஞ்சேமித்த சரீரத்தைக்காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, “சிவபெருமான் ஆதிகாலத்திலே தம்முடைய பஞ்சவத்திரத்தினின்றும் தோற்றுவித்த காமிக முதலிய சைவாகமங்களிலே பேசப்பட்ட மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுத் தமியேனைக்கொண்டு தமிழினாலே ஒரு நூல் செய்வித்தற் பொருட்டு இச்சரீரத்தை மறைத்தருளினார்” என்று தெளிந்து, திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்திலே பிரவேசித்து; சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப்பக்கத்தில் இருக்கின்ற அரசின் கீழே போய், சிவயோகத்தில் இருந்தார். அவர் மூவாயிரம் வருஷமளவு அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு திருப்பாட்டாக மூவாயிரம் திருப்பாட்டினால் சைவாகமங்களின் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரமென்னுந் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கைலாசத்தை அடைந்தார். திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்

Advertisements

%d bloggers like this: