Posts Tagged ‘தில்லைவாழந்தணர் சருக்கம்’

தில்லைவாழந்தணர் சருக்கம்

07/24/2011

ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி

கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி
யற்புதத் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று
பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி

போற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றே
னீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக் குரிய தொண்டாம்
பேற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணி வாழு
மாற்றினார் பெருகு மன்பா லடித்தவம் புரிந்து வாழ்வார்.

நல்லவா னவர்போற்றுந் தில்லை மன்று
ணாடகஞ்செய் பெருமானுக் கணியார் நற்பொற்
றொல்லைவான் பணியெடுத்தற் குரியார் வீடுந்
துறந்தநெறி யார்தொண்டத் தொகைமுன் பாடத்
தில்லைவா ழந்தணரென் றெடுத்து நாதன்
செப்புமரு ளுடையார்முத் தீயார்பத்திக்
கெல்லைகாண் பரியாரொப் புலகிற் றாமே
யேய்ந்துளா ரெமையாள வாய்ந்து ளாரே.

தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள பரதகண்டத்தில் இலங்கைக்கும் இமயமலைக்கும், நடுவிலுள்ள தில்லைவனமும் சமமாகும்.

சாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.

இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அந்தத் தில்லை வனத்தின்கண்ணே முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமான் சர்வான்மாக்களுக்கும் அருள் செய்யும் பொருட்டுத் திருமூலத்தனமாகிய சிவலிங்க வடிவமாய் எழுந்தருளியிருப்பார். அந்தத் திலமூலத்தானத்துக்குத் தெற்குத் திக்கிலே திருவருள் வடிவாகிய கனகசபை இருக்கின்றது. அந்தக் கனகசபையின் கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவபிரான் தமது அருட்சத்தியாகிய சிவகாமியம்மையார் காண அனவரதமும் ஆனந்தத் தாண்டவஞ் செய்தருளுவர்.

திருமூலத்தானலிங்கத்துக்கும் சபாநாதருக்கும் வேத சிவாகம விதிப்படி பூசை முதலியவை செய்யும் பிராமணர்கள் தில்லைவாழந்தணர் என்று சொல்லப்படுவர்கள். அவர்கள் மூவாயிரவர். அவர்கள் குற்றமில்லாத வமிசத்தில் உதித்தவர்கள். பாவமென்பது சிறிதுமில்லாதவர்கள்; புண்ணியங்களெல்லாம் திரண்டு வடிவெடுத்தாற்போன்றவர்கள். கிருகத்தாச் சிரமத்தில் ஒழுகுகின்றவர்கள். இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதங்களையும், சிக்ஷை வியா கரணம் சந்தோ விசிதி நிருத்தம் சோதிடம் கற்பம் என்னும் ஆறு வேதாங்கங்களையும், மீமாஞ்சை நியாயம் புராணம் மிருதி என்னு நான்கு உபாங்கங்களையும் ஓதியுணர்ந்தவர்கள். ஆகவனீயம் தக்ஷிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்றக்கினிகளையும் விதிப்படி வளர்க்கின்றவர்கள். ஓதல் ஓது வித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் அறுதொழிலினாலும் கலியை நீக்கினவர்கள். விபூதி உருத்திராக்ஷம் என்னுஞ் சிவசின்னங்களை விதிப்படி சிரத்தையோடு தரிக்கின்றவர்கள். சிவபெருமானுடைய திருவடிக்கண்ணே இடையறாது பதிந்த அன்பே தங்களுக்குச் செல்வமெனக் கொள்கின்றவர்கள்.

அவர்கள் சமயதீக்ஷை விசேஷதீக்ஷை நிருவாணதீக்ஷை ஆசாரியாபிஷேகம் என்னுநான்கும் பெற்றவர்கள். காமிக முதல் வாதுளமிறுதியாகிய சைவாகமங்கள் இருபத்தெட்டையும் ஓதியுணர்ந்தவர்கள். அச்சைவாகமங்களால் வீட்டு நெறிகள் இவையென உணர்த்தப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் வழுவா வண்ணம் அநுட்டிக்கின்றவர்கள்.

அவர்கள் சபாநாயகர் “இவ்விருடிகளில் நாம் ஒருவர்” என்று அருளிச்செயப்பெற்ற பெருமையையுடையவர்கள். அதுமட்டோ, தியாகேசர் சுந்தரமூர்த்திநாயனாருக்குத் திருத்தொண்டத்தொகை பாடும்படி அருளிச்செய்தபோது “தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்” என்று அவர்களைத் தமது அருமைத்திருவாக்கினாலே எடுத்துச் சொல்லியருளினார். இங்ஙனமாயின், அவர்களுடைய அளவிறந்த மகிமையை நாமா சொல்ல வல்லம்.

Advertisements

%d bloggers like this: