Posts Tagged ‘மானக்கஞ்சாறநாயனார் புராணம்’

மானக்கஞ்சாறநாயனார் புராணம்

07/24/2011

கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்சீர்க்
காதன்மகள் வதுவைமணங் காண நாதன்
வஞ்சமலி மாவிரதத் தலைவ னாகி
வந்துபுகுந் தவளளக மகிழ்ந்து நோக்கிப்
பஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்
பத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா
லெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை
யேயர்பிராற் குதவியரு ளெய்தி னாரே.

ஞ்சாறூரிலே, வேளாளர்குலத்திலே, அரசர்களிடத்திற் பரம்பரையாகச் சேனாதிபதிநியோகத்தில் இருக்கின்ற குடியிலே சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்த மானக்கஞ்சாறநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிலகாலம் பிள்ளைப் பேறின்மையால் அதிதுக்கங்கொண்டு, பிள்ளைப் பேற்றின் பொருட்டுப் பரமசிவனை உபாசனைபண்ணி, அவருடைய திருவருளினால் ஒரு பெண்குழந்தையைப் பெற்றார். அந்தப் பெண் வளர்ந்து மணப்பரும் அடைய; ஏயர்கோன் கலிக்காம நாயனார் சில முதியோர்களை மானக்கஞ்சாறநாயனாரிடத்தில் அனுப்பி, அந்தப்பெண்ணைத் தமக்கு விவாகஞ் செய்து தரும்படி பேசுவித்து, அவர் அதற்கு உடன்பட்டமையை அறிந்து, சோதிடர்களாலே நிச்சயிக்கப்பட்ட சுபதினத்திலே மணக்கோலங்கொண்டு, சுற்றத்தார்களோடும் கஞ்சாறூருக்குச் செல்லும்படி பிரஸ்தானமானார்.

அவர் கஞ்சாறூருக்கு வருதற்குமுன்னே, கருணாநிதியாகிய பரமசிவன் ஒரு மகாவிரதி வடிவங்கொண்டு, மானக்கஞ்சாற நாயனார் வீட்டுக்குச் சென்றார். அந்நாயனார் அவரைக்கண்டு எதிர்கொண்டு, உபசாரவார்த்தைகளைச் சொல்லி வணங்கினார். மகாவிரதியார் அந்நாயனாரை நோக்கி, “இங்கே என்னமங்கல கிருத்தியம் நடக்கப்போகின்றது” என்றுவினாவ; நாயனார் “அடியேனுடைய புத்திரியின் விவாகம் நடக்கப்போகின்றது” என்றார். மகாவிரதியார் “உமக்குச் சோபனம் உண்டாகுக” என்று ஆசிர்வதித்தார் நாயனார் உள்ளே போய், மணக்கோலங் கொண்டிருந்த தமது புத்திரியை அழைத்துவந்து மகாவிரதியாரை வணங்கும்படி செய்தார். மகாவிரதியார் தம்மைவணங்கி எழுந்தபெண்ணினுடைய கூந்தலைப் பார்த்து, மானக்கஞ்சாற நாயனாரை நோக்கி, “இந்தப் பெண்ணினுடைய தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்கு (பஞ்சவடியாவது மயிரினாலெ அகலமாகச் செய்யப்பட்டு மார்பிலே பூணூலாகத் தரிக்கப்படும் வடமாம். பஞ்சம் -விரிவு வடி-வடம்) உதவும்” என்றார். உடனே நாயனார் தம்முடைய உடைவாளை உருவி, “இவர் இது கேட்டதற்குச் சிறியேன் என்னபுண்ணியஞ் செய்தேனோ” என்று, அந்தப் பெண்ணினுடைய கூந்தலை அடியிலே அரிந்து, அம்மகாவிரதியார் கையிலே நீட்ட; கடவுள் தாங்கொண்டு வந்த மகாவிரதிவடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றினார். அதுகண்டு, மானக்கஞ்சாறநாயனார் பரவசமாகி, அடியற்ற மரம்போல விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ்சவியஸ்தராகி நின்றார். சிவபெருமான் அம்மானக்கஞ்சாற நாயனாருக்குத் தம்முடைய சந்நிதானத்திலே தம்முடைய பெருங்கருணைத் திறத்தைப் புகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் பேற்றைக் கொடுத்து அந்தர்த்தான மாயினார்.

கலிக்காமநாயனார் கஞ்சாறூரிலே வந்து சேர்ந்து அங்கே நிகழ்ந்த சமாசாரத்தைக் கேள்வியுற்று மனமகிழ்ந்து, திருவருளைத்துதித்து, “முண்டிதஸ்திரியை விவாகம்பண்ணுதல் சாஸ்திர விரோதமன்றோ” என்று மனந்தளர, அதற்குச் சிவபெருமான் “கலிக்காமா! நீ மனந்தளரவேண்டாம்; இந்தப் பெண்ணுக்குக் கூந்தலை மீளக் கொடுத்தருள்கின்றோம்” என்று அருளிச்செய்த திருவாக்கைக் கேட்டு, மனத்தளர்ச்சி நீங்கி, முன்போலக் கூந்தலைப் பெற்ற அப்பெண்ணை விவாகஞ்செய்து கொண்டு, தம்முடைய ஊருக்குப் போய்விட்டார்.

Advertisements

%d bloggers like this: