Archive for May, 2011

முதல் தந்திரம் சிவபரத்துவம்

05/08/2011

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவ பெருமானே.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. 

சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

திருமூலரது முன்னை நிலை

05/08/2011

இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது.

திருவாவடுதுறையில் சிவயோகம்

05/08/2011

சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.

`சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.

திருமந்திரம் அருளிச் செய்தல் இங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே

என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

திருமூல நாயனார்

05/08/2011

திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டாம சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.

தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்காதொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் விடம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.

மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் ‘இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்’ என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. ‘இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா’ எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.
சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார். பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.

அந்நிலையில், மூலனுடைய மானமிகு மனையறக் கிழத்தியாகிய நங்கை, ‘என் கணவர் பொழுது சென்ற பின்னரும் வரத் தாழ்ந்தனரே அவர்க்கு என்ன நேர்ந்ததோ’ என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தையடைந்தாள். தன் கணவது உடம்பிற் தோன்றிய உள்ளுணர்வு மாற்றத்தைக் கண்டு ‘இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்’ என்று எண்ணி அவரைத் தளர்வின்றி இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடுவதற்கு நெருங்கினாள். திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டவொண்ணாதவாறு தடுத்து நிறுத்தினார். தன் கணவனையன்றி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தார் ஒருவருமின்றித் தனியாளாகிய அவள், அவரது தொடர்பற்ற நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினாள். ‘உமது அன்புடைய மனைவியாகிய எளியோனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்கு எத்தகைய பெருந் துன்பத்தைச் செய்து விட்டீர்’ என்று கூறிப்புலம்பி வாட்டமுற்றாள். அந்நிலையில் நிறைதவச்செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி ‘நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை’ எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்கியிருந்தற்கென அமைந்துள்ள பொதுமடத்திற் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.

தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி, அது பற்றி யாரிடத்தும் சொல்லாமலும், தவ நிலையினராகிய அவர் பால் அணையாமலும் அன்றிரவு முழுவதும் உறங்காதவராய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும் தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள். அதுகேட்ட சான்றோர், திருமூலரை அணுகி அவரது நிலைமையை நாடி, ‘இது பித்தினால் விளைந்த மயக்கமன்று’ பேய் பிடித்தல் முதலாகப் பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக் கலக்கங்களையெல்லாம் அறவே களைந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இவர் அமைந்துள்ளார். இந்நிலைமை யாவராலும் அளந்தற்கரியதாம்’ எனத் தெளிந்தனர். “இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றுணர்வுடையவராக விளங்குகின்றார். ஆகவே முன்னை நிலைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய வாழ்வில் ஈடுபடுவார் அல்லர்’ என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்ட அவள், ‘அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளைத் தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

சாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம் உடம்பினைச் சேமமாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். பிறைமுடிக்கண்ணிப் பெருமானாகிய இறைவன், உயிர்களிடம் வைத்த பெருங்கருணையாலே அருளிய சிவாகமங்களின் அரும் பொருள்களை இந்நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்றிறத்தால் சிவயோகியாரது முந்தைய உடம்பினை மறைப்பித்தருளினார். இம்மெய்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளியவுணர்ந்தார். அந்நிலையில் தம்மைப் பின் தொடர்ந்து வந்த ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதை அவர்கட்கு விளங்க அறிவுறுத்தருளினார்; அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விட்டத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார். அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரச மரத்தின்கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, உள்ளக் கமலத்தில் வீற்றிருந்தருளும் அரும்பொருளாகிய சிவபுரம் பொருளோடு இரண்டறக்கூடி ஒன்றியிருந்தார்.

இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலநாயனார் ஊனோடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் நல்ல திருமந்திரமாலையாகிய நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே

என்னும் திருப்பாடலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார். தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று இனிதிருந்தார்.

முதல் தந்திரம் – பாயிரம்

05/08/2011

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.

திருவையாறு ஓவியம்

05/07/2011

>

திருவையாறு ஓவியம்
சூரிய பகவான், தஞ்சையை அடுத்த திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோயிலுக்கு தனது மனைவிமார்கள் உஷா தேவி, பிரத் உஷா தேவி ஆகியோருடன்வந்து தங்கியிருந்து தனது பெயரால் அமைந்த சூரிய தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்துள்ளார்.இந்த சம்பவத்தை தேவாரம் பாடிய ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர்,“ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு” என்று தனது பாடலில் குறிப்பிட்ட்டுள்ளார்.இன்றும் திருவையாறு ஐயாறப்பர் கோயில் சோமாஸ்கந்தர் மண்டபத்தில் சூரியன் இருகரங்களிலும் தாமரை மலர் ஏந்தி நிற்க அவரது இருபுறமும் சூரியனின் தேவியர்இருவரும் நிற்பதைப் போன்ற ஓவியம் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். தென் கைலாயம்என்ற சிறப்புப் பெயரும் திருவையாறு ஐயறப்பர் கோயிலுக்கு உண்டு. சமயக்குரவர்களில் ஒருவரான அப்பருக்கு சிவ பெருமான் திருவையாறில் கயிலைக்காட்சியினைக் காட்டி அருள் புரிந்தாகவும், இதனால் வடக்கே காசிக்கு தீர்த்தயாத்திரை செல்ல முடியாத பக்தர்கள் தென் கயிலாயமான திருவையாறு வந்தால்காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. சூரியனுடையவழியில்வந்த ஸ்ரீ ராமன் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை பூஜித்து வணங்கினார். பொதுவாக சிவாலய்யங்களில் நவக்கிரகங்கள் வேறு வேறு திசையில் இருக்கும்.இதற்கு நேர் மாறாக திருவையாறில் நவக்கிரகங்களில் ஏனைய எட்டு கிரகங்கள்சூரியனையே பார்த்து நிற்கின்றனர். பொங்கல் திருநாளில் ஐயாறப்பர் பாரிவேட்டை என்ற விழா பங்கேற்ககால்நடைகளை ஓட்டிச் செல்வது போன்ற காட்சி கோயிலின் திருச் சுற்ரு மாளிகையில்வரையப்பட்டுள்ளன. இந்தச் சித்திரங்கள் 17-ஆம் ஆனைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள்கூறுகின்றனர். இக்கோயில் தஞ்சாவூரிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரனுக்குரிய தலமான திங்களூர்அமைந்திருக்கிறது திங்களூரில் தரிசிப்பவர்கள் இங்கு வந்து ஐயாறப்பனைதரிசித்தால் தான் முழு பலன்பெறமுடியும் என்பது மரபு. சந்திரன் சஸ்யாததி பதி..சூரியனின் கதிரை வாங்கித் தான் அருள்பாலிக்கிறான். எனவே, திருவையாறில் சூரியன்வழிபட்டதாலும், ஸ்ரீ ராமன் வழிபட்ட தலமானதால் இங்கு வழிபாடு செய்தல் சிறந்தபயனுடையது. இத்தலம் தரூமபுரம் ஆதீனத்திற்குச் சேர்ந்தது.

05/07/2011

>

மூலிகைகளாலான ஓவியங்கள்















































05/03/2011

>

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி